விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் மக்கள் நீதி மையம், சமத்துவ மக்கள் கட்சி, மற்றும் இந்திய ஜனநாயக கட்சி கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் விவேகானந்தனை ஆதரித்து, ராதிகா சரத்குமார் கிராமப் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து வேட்பாளரை அறிமுகப்படுத்திய பின்பு, செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அதில் ராதிகா கூறியதாவது, “நாங்கள் ஒரு முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். அந்த முயற்சியில் வெற்றி எங்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறோம். நான் கிராமம் மற்றும் நகரப் பகுதியில் மக்களை சந்திக்கிறேன். மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். அந்த மாற்றத்திற்கு இத்தேர்தல் ஒரு வெளிச்சமாக இருக்கும் என நினைக்கிறேன். மக்கள் இத்தேர்தலில் சிந்தித்து செயல்பட வேண்டும்.
பெண்களை இழிவாகப் பேசுவது திமுகவிற்கு ஒன்றும் புதிதல்ல. திமுகவில் நிறைய பேர் இந்த மாதிரி தான் பேசிக்கொண்டு இருக்கின்றனர். அதுவும் மத்திய அமைச்சராக இருந்த ராசா பேசுவது கண்டிக்கத்தக்கது. நான் 1989இல் இருந்து பல கட்சிகளுக்கு பரப்புரையில் ஈடுபட்டு உள்ளேன். தற்போது வரை பொதுமக்கள் மிகவும் குடி தண்ணீருக்கு கஷ்டப்பட்டு வருகின்றனர். குடிதண்ணீர் கிடைக்காதது மிகுந்த வருத்தமளிக்கிறது.
“பெண்களை இழிவாக பேசுவது திமுகவிற்கு புதிதல்ல”-ராதிகா சரத்குமார் பேட்டி: கடந்த 50 ஆண்டு காலமாக திமுகவும், அதிமுகவும் நான் பெரியவனா; நீ பெரியவனா என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த இரண்டு கட்சிகளிலும் பிரதானத் தலைவர்கள் இல்லை. திமுகவில் ஸ்டாலினை அக்கட்சிக்காரர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதிமுகவில் ஒரு தலைவர் என்று சொல்வதற்கு ஆளில்லை. ஆகையால் இருவரும் போட்டி போடுவதால் மக்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். எனவே மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். அவர்களுக்கு சேவை செய்பவர்களை பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும். தமிழ்நாடு மக்கள் விலை போகாமல், அவர்கள் வாக்குகளை அளிக்க வேண்டும்” எனக் கூறினார்.
இதையும் படிங்க:ஆ. ராசா பரப்புரைக்கு தடை கோரி புகார் மனு