கரோனா ஊரடங்கு பல்வேறு தொழில்களை மந்தமடையச் செய்தது. அதே நேரத்தில் இந்த கரோனா காலம் மாற்றுத் தொழில்களை உருவாக்கி தொழில்நுட்பங்களை மேம்படுத்தியுள்ளது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. குறிப்பாக முகக்கவச உற்பத்தி, விற்பனைத் தொழில் தற்போது அமோகமாக நடைபெற்றுவருகிறது.
கரோனாவிலிருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்க கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும் பலர் கைக்குட்டைகளைத்தான் பெரும்பாலும் பயன்படுத்திவருகின்றனர். அதற்கு காரணம் முகக்கவசத்தின் விலை, சந்தை தட்டுப்பாடு. பெரும்பாலும் முகக்கவசங்கள் சீனா போன்ற வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன.
ஆனால், தற்போது அந்தப் பிரச்னையை சரிசெய்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் புதிய தொழிற்சாலை உருவாகியுள்ளது. சிவகாசியைச் சேர்ந்த பாலாஜி என்பவர், ஜமுக்காலம் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனம் நடத்திவருகிறார். கரோனா ஊரடங்கு காரணமாக ஜமுக்காலம் தொழில் முடங்கியதைத் தொடர்ந்து மாற்றுத்தொழிலான என்95 முகக்கவசம், பிபிஇ கிட்களை தயாரிக்கும் பணியில் ஈடுபடத்தொடங்கினார்.