விருதுநகர்: சிவகாசி அருகே மண்குண்டாம்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு தொழிற்சாலையில் நேற்று வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த தாயில்பட்டியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிப்பதாக அறிவித்து உள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே தாயில்பட்டியை அடுத்த மண்குண்டாம்பட்டியில் தனியார் பட்டாசு தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் மத்தாப்பு, ரோல் கேப் மற்றும் பட்டாசுகள் ஆகியவை தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் சுமார் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று (ஜூலை 25) வழக்கம்போல் ரோல் கேப் பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மருந்துகளில் ஏற்பட்ட ஊராய்வு காரணமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த விபத்து குறித்து அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த வெம்பக்கோட்டை, சிவகாசி, சாத்தூர் பகுதியைச் சேர்ந்த தீயணைப்பு துறையினர் 4 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பட்டாசு வெடி விபத்து ஏற்பட்ட தொழிற்சாலையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் மற்றும் சாத்தூர் எம்எல்ஏ எ.ஆர்.ஆர் ரகுராமன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த விபத்தில் தாயில்பட்டியைச் சேர்ந்த பானு என்ற பாலசரஸ்வதி, விஸ்வநத்தத்தை சேர்ந்த முருகேஸ்வரி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காவல் துறையினர் இருவரின் உடலையும் உடற்கூறு ஆய்விற்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த வெம்பக்கோட்டை காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “சிவகாசி, மண்குண்டாப்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் முருகேஸ்வரி மற்றும் பானு எனும் இரு பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.