தீபாவளி பண்டிகை என்றாலே கொண்டாட்டம் தான். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை உடுத்தி, இனிப்பு பரிமாறி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். இந்த கொண்டாட்டத்தில் மிக முக்கியமான ஒன்று பட்டாசு. பட்டாசு தயாரிப்பில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி பெரும் பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு இரண்டு மாதங்களுக்கு முன் வரும் ஆடிப்பெருக்கு தினத்தன்று பூஜை போட்டு வியாபாரிகள் பட்டாசு விற்பனையை தொடங்குவர். அதைத்தொடர்ந்து வரும் விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை காலங்களில் பட்டாசு விற்பனை களைகட்டி தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில் பட்டாசு விற்பனை சூடுபிடிக்கும்.
ஆனால் இந்த ஆண்டு வட மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை, கரோனா காரணமாக உற்பத்தி பாதிப்பு, பசுமை பட்டாசு கெடுபிடி உள்ளிட்டவற்றால் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை நாட்களிலும் எதிர்பார்த்த அளவு விற்பனை நடைபெறவில்லை.
மூலப்பொருட்கள் விலை உயர்வு
இது குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், "நீதிமன்றத்தின் உத்தரவுப்படி பசுமை பட்டாசுகள் அதிகளவு தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுபாடும், அதிக சத்தம் எழுப்பும் வெடிகளும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி நேர கட்டுப்பாடுகளுக்கு தளர்வு அளிக்க வேண்டும். பட்டாசு தொழிலையே நம்பி உள்ள சுமார் எட்டு லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரோனா ஊரடங்கால் வெளி மாநிலங்களிலிருந்து பட்டாசு ஆர்டர்கள் குறைந்துள்ளது. பட்டாசு தயாரிப்பதற்கான மூலப் பொருட்களின் விலை உயர்ந்து விற்பனை மந்தமாகியிருக்கிறது" என்றார்.