விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மஞ்சள் ஓடைப்பட்டி கிராமத்தில் விஜய குலத்தைச் சேர்ந்த கருப்பசாமி என்பவரது சோலை பட்டாசு தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இந்த பட்டாசு தொழிற்சாலை நாக்பூர் உரிமம் பெற்று பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இங்கு சுமார் 50க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அறை தரைமட்டமானது
இந்நிலையில், இன்று பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர் கருப்பசாமி, அவரது உறவினர் செந்தில்குமார் ஆகியோர் பட்டாசு தயாரிப்பதற்காக மருந்து கலக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது உராய்வினால் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
அவர்கள் வேலை செய்து கொண்டிருந்த அறை இடிந்து தரைமட்டமானது. அப்போது பணியில் இருந்த ஏழு பேர் காயமடைந்தனர். வெடி விபத்து குறித்து தகவல் அறிந்த வெம்பக்கோட்டை, சாத்தூர் பகுதியில் இருந்து மூன்று தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து வீரர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டு காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.