விருதுநகர்:உலகெங்கிலும் இன்று (அக் 24) கொண்டாடப்பட்டு வரும் தீபாவளி பண்டிகையில், பட்டாசுக்கு இடம் கொடுக்காமல் இருந்து விட முடியாது. நல்லெண்ணெய் குளியல், இனிப்பு வகைகள், ஆவி பறக்கும் இட்லி, சுடச்சுட பிரியாணி என்று தீபாவளி நகர்ந்தாலும் அதன் மையப்புள்ளியாக விளங்குவது வண்ணமயமான பட்டாசுகளே.
இந்த பட்டாசுகள் விற்பனையின் முன்னோடியாக தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி எப்போதும் நம்பர் ஒன் தான். இப்படிப்பட்ட பட்டாசு தயாரிப்பில் சிவகாசி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வாழும் 85% பேர் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு ஆண்டு முழுவதும் தயாரிக்கப்படும் பட்டாசுகளின் விற்பனை, ஒவ்வொரு ஆண்டின் ஆடி 18ஆம் தேதியான ஆடிப்பெருக்கு தினத்தன்று, சிவகாசி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பட்டாசு கடைகளில் பூஜை போட்டு தொடங்கப்படுகிறது.
முதலும் முதலாக விநாயகர் சதுர்த்தி அன்று தொடங்கி, தொடர்ந்து ஆயுத பூஜை காலங்களிலும் பட்டாசு விற்பனை பற்றத் தொடங்கும். தீபாவளி பண்டிகை தினத்தை நெருங்க நெருங்க, வான வேடிக்கையாய் ஜொலிக்கும். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனோ கட்டுப்பாடுகள் மற்றும் பல மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதித்ததை அடுத்து, பட்டாசு விற்பனை சரிவை சந்தித்தது.
இந்த நிலையில் நடப்பாண்டில் பட்டாசு விற்பனை களை கட்டி இருப்பதாகவும், பட்டாசு தொழிலாளிகளுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக சென்னை, கோவை, திருச்சி, நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும் நேரடியாக சிவகாசிக்கு வந்து பட்டாசுகளை வாங்கிச் செல்வதாகவும் வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.