சாத்தூர் வடக்கு ரத வீதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொழிற்சங்கம் சார்பில் அச்சங்குளம் மாரியம்மாள் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் அறிவித்த உதவித் தொகையை உடனடியாக வழங்கிட கோரியும் ஆலை உரிமையாளர் வழங்கிய காசோலைக்கான பணத்தைப் பெற்றுத்தரக் கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஐ சாத்தூர் வட்டாரச் செயலாளர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார். விருதுநகர் மாவட்ட ஏஐடியுசி பட்டாசு தொழிலாளர் சங்கம் கலைவாசகன், தமிழாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏஐடியூசி மாவட்டத் தலைவர் சமுத்திரம் கண்டன ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கிவைத்தார். சிபிஎம் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் ராமசாமி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார்.
கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி அச்சங்குளம் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சுமார் 28 பேர் உயிரிழந்தனர். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். இதில் பலர் உடல் உறுப்புக்களை இழந்து வாழ்வாதாரம் இன்றி மிகவும் சிரமப்பட்டுவருகின்றனர்.
இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பட்டாசு தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் 5 லட்ச ரூபாய் காசோலையும் மத்திய அரசு சார்பில் 2 லட்ச ரூபாயும் மாநில அரசு சார்பில் 3 லட்ச ரூபாயும் நிவாரணத் தொகையாக அறிவித்தனர்.