விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரியில் தை அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்துவருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது, பிரசித்திபெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில்.
இக்கோயிலுக்கு மாதந்தோறும் அமாவாசை 4 நாள்கள், பௌர்ணமி 4 நாள்கள் என மொத்தம் 8 நாட்கள் மட்டுமே மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
இந்நிலையில் பிரதோஷம், சிவராத்திரி, தை அமாவாசையை முன்னிட்டு பிப்ரவரி 9ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை, 4 நாள்கள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல வனத்துறை, கோயில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளனர்.