விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ள சத்திரப்பட்டி கிராமத்தில் உள்ள ஓ.பி.ஆர் தெருவின் நடுவே பழமையான கிணறு ஒன்று பாழடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இந்தக் கிணறு பல ஆண்டுகளுக்கு முன்பு, இந்த ஊருக்குக் குடிநீர் வழங்கும் நீர் ஆதாரமாக இருந்துள்ளது.
காலப்போக்கில் நீர் வற்றி, கிணறு வறண்டு போனதால் பொதுமக்களும் குப்பைகளைக் கொட்டி, கிணற்றை குப்பைத் தொட்டியாக மாற்றி விட்டனர். மழைக்காலங்களில் மழை நீர் கிணற்றில் நிறைந்து குப்பைகளுடன் சேர்ந்து துர்நாற்றம் வீச ஆரம்பித்து விடுகிறது. மேலும், கொசு உற்பத்தியாகும் இடமாகவும் மாறிவிடுகிறது.
தெருவின் நடுவே சிதைந்த நிலையில் உள்ள கிணறு இதனால் இப்பகுதி மக்கள் பல்வேறு நோய் தொற்றுகளினால் பாதிக்கப்படுகின்றனர். தற்போது கிணற்றின் பக்கவாட்டுச் சுவர்கள் சிதிலமடைந்து விழும் நிலையில் உள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் கிணறு அமைந்திருப்பதால் குழந்தைகளோ அல்லது வாகனத்தில் செல்பவர்களோ கிணற்றுக்குள் விழுந்துவிடுவார்களோ என்று அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர்.
எனவே, அசம்பாவிதம் ஏதும் நிகழ்வதற்கு முன்பே அரசு நடவடிக்கை எடுத்து அந்தக் கிணற்றினை மழை நீர் சேகரிப்புத் தொட்டியாக மாற்ற வேண்டும் அல்லது முழுமையாக மண் போட்டு மூட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதையும் படிங்க: ''புதிய மொந்தையில் பழைய கள்''-தான் மத்திய பட்ஜெட்: விவசாய சங்கத் தலைவர் தெய்வசிகாமணி!