இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படுவதற்கு முன்பு மெட்ராஸ் மாகாணத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனப் பல மொழிகள் பேசுபவர்களும் இருந்தனர். மெட்ராஸ் மாகாணத்தில் தமிழ் பேசுவோர்தான் அதிக எண்ணிக்கை கொண்டவர்கள், எனவே மெட்ராஸ் ஸ்டேட் என்று அழைக்கப்பட்ட தமிழகத்திற்கு, தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்தவர் தியாகி சங்கரலிங்கனார்.
இவர், 76 நாள்கள் தனது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டி உண்ணாவிரதம் இருந்தார். காமராஜர், ராஜாஜி, அண்ணா போன்ற தலைவர்கள் பலர் வலியுறுத்தியும் அவர் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்தார். தொடர்ந்து அவரது உடல்நிலை மோசமடைந்து 1956ஆம் ஆண்டு அக்டோபர் 13 இல்உயிர் நீத்தார். அவருடைய தியாகத்தைத் தொடர்ந்து, மக்களிடையே "தமிழ்நாடு" என்ற பெயருக்கு ஆதரவு பெருகத் தொடங்கியது. இதனையடுத்து சட்டப் பேரவையிலும், மக்களவையிலும் இந்தக் கோரிக்கை ஒலிக்க ஆரம்பித்தது.
அவரது மறைவுக்குப் பின்னர் பல்வேறு அமைப்பினர் 'தமிழ்நாடு' எனப் பெயர் மாற்றக் கோரி போராட்டம் நடத்தினர். அதன்படி 1962ஆம் ஆண்டு மார்ச் மாதம் மக்களவையில் "தமிழ்நாடு” என பெயர் மாற்றக் கோரிக்கைக்காகத் தனி மசோதா கொண்டு வந்தபோது, தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 1964ஆம் ஆண்டு ஜனவரியில் சட்டப் பேரவையில் "தமிழ்நாடு" என்ற பெயரை மெட்ராஸ் மாநிலத்துக்கு சூட்டத் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோதும் அத்தீர்மானம் தள்ளுபடி செய்யப்பட்டது.