தமிழ்நாட்டில் கரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளுடன், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அருப்புக்கோட்டையில் முழு ஊரடங்கான நேற்று (மே 16) அனைத்துக் கடைகள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன.
ஊரடங்கு முழுமையாக செயல்படுத்தப்படுகிறதா என நகராட்சி சுகாதாரத் துறையினர், வருவாய்த் துறையினர், காவல்துறையினர் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பூ மார்க்கெட் பகுதியில் பூ வியாபாரிகள் முழு ஊரடங்கை மீறி பூக்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.
அரசு அலுவலர்கள் வருவதை அறிந்த வியாபாரிகள் பூக்கள், தராசுகளை அப்படியே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர். ஒரு சில கடைகளில் கடையை பூட்டி விட்டு கடையின் உள்ளே இருந்து கொண்டே பூக்கள் தொடுத்துக் கொண்டிருப்பதையும் அலுவலர்கள் கண்டுபிடித்தனர்.