ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும், ஆங்காங்கே சட்டவிரோதமாக அரிசி கடத்தப்பட்டுவருகிறது. இந்த வேளையில் விருதுநகர், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து குடிமைப்பொருள் வழங்கல் புலனாய்வு குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ஜான்பிரிட்டோ, குடிமைப்பொருள் வழங்கல் அலுவலர் லோகநாதன் தலைமையிலான அலுவலர்கள் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, அல்லம்பட்டி பகுதியிலுள்ள தனியார் அரிசி ஆலை முன் மினிவேனிலிருந்து வேன் ஓட்டுநர் அரிசி மூட்டைகளை இறக்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தனர். இதனால் சந்தேகமடைந்த அலுவலர்கள் அவர்களிடம் விசாரணை நடத்தினார். அந்த அரிசி மூட்டைகள் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட ரேஷன் அரிசி என்று தெரியவந்தது.