அருப்புக்கோட்டை நெசவாளர் காலனியில் விருதுநகர் மாவட்ட கூட்டுறவு பண்டக சாலையின் கீழ், இயங்கும் முழு நேர நியாய விலைக் கடை செயல்பட்டுவருகிறது. இதில் மகேஸ்வரி என்ற பெண் விற்பனையாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
மகேஸ்வரி தினமும் தாமதமாகப் பணிக்கு வருவதாகப் புகார் எழுந்த நிலையில், வட்ட வழங்கல் அலுவலர் ரமணன் சம்பந்தப்பட்ட நியாயவிலை கடைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது விற்பனையாளர் இல்லாமல் விற்பனையாளரால் தனிப்பட்ட முறையில் நியமிக்கப்பட்ட இரண்டு நபர்களால் கடை இயங்கியது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்களை வெளியேற்றி விட்டு, நியாயவிலைக் கடைக்கு வட்ட வழங்கல் அலுவலர் ரமணன் சீல் வைத்தார்.
அதன் பின் விற்பனையாளர் மகேஸ்வரி வந்து பார்த்த போது கடை சீல் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வட்ட வழங்கல் அலுவலகத்திற்குச் சென்று அலுவலர் ரமணணிடம், ' தான் பணிபுரியும் இடத்தில் கழிவறை வசதி இல்லை இயற்கை உபாதைக்காக மூன்று தெருக்கள் தாண்டி செல்ல வேண்டியுள்ளது. அவ்வாறு சென்ற சமயத்தில் கடைக்குச் சீல் வைக்கப்பட்டுள்ளது' என எழுதிக் கொடுத்தார்.