விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே அச்சங்குளத்தில் உள்ள பட்டாசு ஆலையில் பிப்ரவரி 12ஆம் தேதி வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் இதுவரை 20 தொழிலாளா்கள் உயிரிழந்த நிலையில் 20க்கும் மேற்பட்டவா்கள் சாத்தூர் மற்றும் சிவகாசியில் தனியார், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு பட்டாசு வெடிவிபத்தில் பலியானவர்களுக்கு மூன்று லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும் நிவாரண தொகையாக வழங்கப்படுமென அறிவித்தது.
இந்த நிலையில் சாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி உயிரிழந்த 20 பேரின் குடும்பங்களுக்கு மூன்று லட்ச ரூபாய் நிவாரண தொகைக்கான காசோலையை வழங்கினார்.
அரசின் நிவாரணத் தொகையை வழங்கும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் தலா ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையையும் வழங்கினார்.
பின்னர் செய்தியாளா்களிடம் கூறிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, "இதுபோன்ற சம்பவங்கள் இதுவே கடைசியாக இருக்க வேண்டும் என்பதுதான் முதலமைச்சரின் எண்ணம். பட்டாசு தொழில் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலத்திலேயே பட்டாசு பயிற்சி மையம் உருவாக்கப்பட்டது. பட்டாசு தீப்பெட்டிக்கு நல வாரியத்தை முதலமைச்சர் உருவாக்கியுள்ளார்.
தாய், தந்தையை இழந்த நடுசுரங்குடி நந்தினிக்கு தேவையான படிப்பு செலவினை நாங்கள் ஏற்றுக்கொள்வோம். அந்தக் குழந்தைக்கென தனி கவனம் செலுத்தி எங்கள் வீட்டுப் பிள்ளையாக நாங்கள் கவனித்துக் கொள்வோம். தாய், தந்தை இழந்த குழந்தைக்கு எவ்வளவு நிவாரணம் கொடுத்தாலும் தாய், தந்தை இழப்பு நிவர்த்தி செய்ய முடியாத ஒரு குறையாக இருக்கும். எனவே அந்த குழந்தையை கவனித்துக்கொள்வது எங்கள் பொறுப்பு" என்றார்.
இதையும் படிங்க:'பட்டாசு ஆலைகள் முறையாக செயல்படுகிறதா என்பதை அரசு கண்காணிக்க வேண்டும்'