விருதுநகர்:விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டியைச்சேர்ந்த கூலித்தொழிலாளி மகேஸ்வரன், இவரது மகன் கவி தேவநாதனுக்கு(6), நேற்று காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்மந்தபுரம் பகுதியில் தனியாக மருத்துவமனை நடத்தி வரும் அரசு மருத்துவர் பாஸ்கரனிடம் அழைத்துச்சென்றுள்ளானர்.
அங்கே, காய்ச்சலுக்கு ஊசி போட்டு சிகிச்சை எடுத்துக்கொண்ட பின்னர், வீடு திரும்பிய பிறகு கவி தேவநாதனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதுடன் அதிகமாக வியர்த்துள்ளது. மீண்டும் மருத்துவர் பாஸ்கரனிடம் சென்றபோது, சிறுவனை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லுமாறு மருத்துவர் தெரிவித்துள்ளார்.
சிறுவனை தென்காசி சாலையில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு தந்தை அழைத்துச்சென்றுள்ளார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, மகேஸ்வரன் அளித்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, வடக்கு காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
சிறுவன் இறந்த சம்பவம் குறித்து இன்று காலை மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறையின் மாவட்ட இணை இயக்குநர் டாக்டர்.முருகவேல், சுகாதாரப்பணிகள் துறையின் துணை இயக்குனர் கலு சிவலிங்கம், நகராட்சியின் நகர் நல அலுவலர் சரோஜா உள்ளிட்ட அதிகாரிகள் இறந்த சிறுவனின் வீட்டில் ஆய்வு நடத்தியதுடன், சிகிச்சை குறித்து உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.