விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஒ. மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் ஆசிரியர் சுந்தர். இவர் ரயில்வே துறையில் புக்கிங் கிளார்க், அலுவலக உதவியாளர் பணிகளை வாங்கித் தருவதாகக் கூறி 38 இளைஞர்களிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதனை நம்பி ஒவ்வொருவரும் தலா நான்கு லட்சம் ரூபாய், சுந்தர் தெரிவித்த சென்னையைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மனைவி இந்திராவின் கணக்கில் செலுத்தியுள்ளார்கள். அதன்படி மொத்தம் நான்கு கோடி ரூபாய் இந்திராவின் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
பணம் செலுத்திய 38 பேருக்கும் 2016ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி ரயில்வே வேலைக்கான ஆர்டர் வந்துள்ளது. அவர்கள் ஆர்டரை எடுத்துக்கொண்டு மதுரை மண்டல ரயில்வே மேலாளர் அலுவலக கண்காணிப்பாளர் சதீஸ்குமாரிடம் காட்டியுள்ளனர். அவர் ஆர்டர்களை வாங்கிக்கொண்டு பணி உத்தரவு வரும் வரை காத்திருக்கும்படி தெரிவித்துள்ளார். இதை நம்பி 38 பேரும் உத்தரவு வரும் வரை காத்திருந்தனர்.
நீண்ட நாள்களாகியும் உத்தரவு வராமல் ஏமாற்றமடைந்த இளைஞர்கள் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையிடம் புகாரளித்தனர். இதையடுத்து 2018ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி ஆசிரியர் சுந்தர், சென்னையைச் சேர்ந்த ஆறுமுகம், இந்திரா, சதீஸ்குமார், பாஸ்கரன், ரயில்வே அலுவலர் சதீஷ்குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் ஆசிரியர் சுந்தரை மட்டும் கைதுசெய்தனர்.