விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள தேசிகாபுரம், மேலத்தெருவைச் சேர்ந்தவர் தங்கவேல் (57). முன்னாள் ஊர் நாட்டாமையான இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு கோயில் தகராறில் கொலை செய்யப்பட்டார். இக்கொலை வழக்கில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடிவந்தனர்.
இந்நிலையில், புதிய தமிழகம் கட்சியின் மாவட்டச் செயலாளர் ராஜலிங்கம், குமார், பால்பாண்டி, ராமராஜ், அண்ணபிரகாஷ், பாலகிருஷ்ணன், சந்திரசேகர், ரமேஷ் முத்துக்குமார், ராமசாமி, சக்திவேல், உள்பட 11 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பால்பாண்டியை தவிர மற்ற 10 நபர்களைக் கைது செய்தனர்.
விருதுநகரில் புதிய தமிழகம் கட்சி ஆர்ப்பாட்டம் இதைத் தொடர்ந்து இன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில், "இக்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜலிங்கம் மீது பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இவ்வழக்கில் சிபிஐ விசாரணை கொண்டு வர வேண்டும். உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும்" என கோஷங்கள் எழுப்பப்பட்டன.
பின்பு ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் புதிய தமிழகம் கட்சி தொண்டர்கள் காவல் துறையினரைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அதையடுத்து காவல் துறையினருக்கும் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காவல் துறையினரின் தொடர் பேச்சுவார்த்தைக்கு பிறகு சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க:விஷத்தைப் பரப்பாதீர்கள், பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் - ஓவைஸியைத் தாக்கும் கிரிராஜ் சிங்