விருதுநகரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் 'புன்னகையை தேடி' என்ற திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது.
காணாமல்போன குழந்தைகளைக் கண்டுபிடிக்க, பெற்றோரைப் பிரிந்துள்ள குழந்தைகளைக் கண்டுபிடித்து பெற்றோர் வசம் ஒப்படைப்பதற்கான சிறப்பு நடவடிக்கையாக இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் காணாமல்போன 10 குழந்தைகள் இதுவரை மீட்கப்படாமல் நிலுவையில் உள்ள வழக்குகளில் குழந்தைகளைக் கண்டுபிடிக்கும் பணியில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சிறப்புக் குழு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் தலைமையில் செயல்படுகிறது. புன்னகையைத் தேடி என்ற திட்டத்தின்கீழ் இன்று (பிப். 2) விழிப்புணர்வு வாகனத்தை பெருமாள் தொடங்கிவைத்தார். பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம், கோயில்கள், சந்தை போன்ற பகுதிகளுக்கு இந்தக் குழு சென்று குழந்தைத் தொழிலாளர், பிச்சை எடுக்கும் குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குத்தாலிங்கம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கணேசன், கலாராணி, குழந்தைகள் நலக்குழுத் தலைவர், தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குநர், சைல்டு லைன் பாதுகாப்பு அலுவலர் நாராயணசாமி, வேர்ல்டு விஷன் இந்தியா அமைப்பு சாரா நிறுவனம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் மாவட்ட அழகு குழந்தை பணியாளர்கள், தொழிலாளர் நலத் துறை உதவி ஆய்வாளர்கள், மனித வர்த்தகம், ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவலர்கள் ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். அவர்களுக்கு சிறப்பு நடவடிக்கை ஆலோசனை வழங்கப்பட்டது.
இதையும் படிங்க...காணாமல்போன மகனை தேடிய பெற்றோர்: இரவு வீடு திரும்பிய சிறுவன்!