தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தீயசக்தி திமுக இனி எந்தத் தேர்தலையும் சந்திக்க முடியாத அளவுக்கு படுதோல்வி அடையும்!'

விவசாயிகளுக்கான கூட்டுறவுச் சங்கக் கடன் தள்ளுபடி, விசைத்தறி மற்றும் கைத்தறி நெசவாளர்களுக்கான சலுகைகள், மக்கள் நலத் திட்டங்கள் உள்பட பல்வேறு அறிவிப்புகளோடு ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜேந்திர பாலாஜிக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார்.

palanisamy election campaign in rajapalayam
ராஜபாளையத்தில் முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பரப்புரை

By

Published : Mar 27, 2021, 10:53 AM IST

Updated : Mar 27, 2021, 11:14 AM IST

விருதுநகர்: ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை ஆதரித்து ராஜபாளையம் காந்தி சிலைப் பகுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரைசெய்தார்.

ராஜபாளையம் தொகுதி வளம்பெற விருதுநகர் மாவட்டம் ஏற்றம்பெற ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடும் ராஜேந்திர பாலாஜிக்கு, இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமென பொதுமக்களிடம் முதலமைச்சர் பரப்புரை மேற்கொண்டார்.

முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பரப்பரைக்கு முன்னர் கூடிய அதிமுகவினர்

அப்போது அவர் பேசியதாவது:

திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து பொய்யான பரப்புரையைச் செய்துவருகிறார். இந்தத் தேர்தலுடன் அதிமுக காணாமல்போய்விடும் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறிவருகிறார்.

ராஜபாளையத்தில் நடக்கும் இந்தப் பரப்புரை கூட்டத்தில் வந்துபார்த்தால் கட்சியின் செல்வாக்குத் தெரியும். தொடர்ந்து அவதூறு, பொய்ப் பரப்புரை மேற்கொண்டுவருகிறார் ஸ்டாலின். இனி திமுக எந்தத் தேர்தலையும் சந்திக்க முடியாத அளவுக்குப் படுதோல்வி அடையும்.

நாட்டு மக்களுக்கு எதுவுமே செய்யாத கட்சியாக அவர்கள் உள்ளார்கள். அதிமுக மக்களுக்கு நன்மை செய்யும் கட்சி. விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதுபோல் இந்தக் கூட்டம் ஒன்றே போதும் அதிமுகவின் வெற்றிக்கு, இங்கு இருக்கிற மக்களே சாட்சி. ராஜபாளையம் அதிமுக வெற்றிக்கு அச்சாணி.

பொய் பரப்புரை செய்யும் ஸ்டாலின்

பத்தாண்டு காலம் ஆட்சியில் இல்லாதபோதும் பொதுமக்களை திமுகவினர் மிரட்டுகின்றனர். உதயநிதி ஸ்டாலின் காவல் துறை உயர் பதவியில் இருக்கிற டிஜிபியை மிரட்டுகிறார்.

திமுக ஒரு அடாவடி கட்சி. அராஜக கட்சி. கொலை, கொள்ளை அடிக்கக் கூடிய கட்சி. இது தீய சக்தி கட்சி என்பதை எம்ஜிஆர் அன்றே கூறினார். இந்தத் தீய சக்தியை மீண்டும் தமிழர்கள் ஆட்சியில் வரவிடாமல் தடுக்க வேண்டும்.

ராஜேந்திர பாலாஜி ஒருவரே இந்த மாவட்டத்துக்கு நல்ல மாற்றத்தை கொண்டு வருவார்

தமிழ்நாடு தற்போது ஒரு அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது. திமுக ஆட்சிக்கு வந்தால் கூலிப்படை வந்துவிடும். ஆகையால் இந்த நிலைமை தமிழ்நாட்டுக்கு வராமல் இருக்க அதிமுகவுக்கு ஆதரவு தாருங்கள்.

கூட்டுறவுச் சங்கத்தில் வாங்கிய கடன் தள்ளுபடி

ராஜபாளையம் பகுதி உழவர்கள், நெசவாளர்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. இந்தப் பகுதியில் குடிமராமத்து செய்து அனைத்து ஆறுகளிலும் தண்ணீர்ப் பற்றாக்குறை இல்லாமல் சேமித்துவைத்துள்ளோம்.

இதனால் வேளாண்மை செழிப்பாக உள்ளது. வேளாண் பெருமக்களின் கோரிக்கையை ஏற்று கூட்டுறவுச் சங்கத்தில் வாங்கிய கடன்கள் தள்ளுபடிசெய்யப்பட்டுள்ளன.

உழவர்களுக்கு மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் தரப்படும்

உழவர்கள் இலவச மின்சார வேண்டும் எனக் கோரிக்கைவைத்துள்ளனர். ஏப்ரல் 1ஆம் தேதிமுதல் மும்முனை மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்.

விசைத்தறி, கைத்தறி நெசவாளர்களுக்கு சலுகைகள்

விசைத்தறி மற்றும் கைத்தறி நெசவாளர்களுக்கு 10 ஆயிரம் பசுமை வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. மீண்டும் அவர்களுக்கு 10 ஆயிரம் பசுமை வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்.

அவர்கள் தங்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைவைத்தார்கள். அதன்படி நெசவாளர் மக்களுக்கு என நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.

கைத்தறி மற்றும் நெசவாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களில் வாங்கிய கடனில் ஒரு லட்ச ரூபாய் வரை தள்ளுபடி செய்யப்படும். கைத்தறி விசைத்தறித் தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு 750 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. இனிமேல் அது ஆயிரம் யூனிட்டாக உயர்த்தப்பட்டு மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்.

நெசவாளர்களுக்குப் பல்வேறு நலத்திட்டங்கள்

மழைக் காலங்களில் இவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே அவர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படும்.

கைத்தறி தொழிலில் சரக்கு மற்றும் சேவை வரியைக் குறைப்பதற்குத் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தப்படும். நூல் விலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, தடையில்லாமல் நூல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அம்மா மினி கிளினிக்

ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் மட்டும் 13 அம்மா மினி கிளினிக்குகள் கொடுத்துள்ளோம். ஒவ்வொரு மருத்துவமனையிலும் ஒரு எம்பிபிஎஸ் டாக்டர் பணியில் உள்ளார். இந்தியாவிலேயே ஒரே நேரத்தில் இரண்டாயிரம் மினி கிளினிக்குகள் கொண்டுவந்தது ஜெயலலிதாவின் அரசு.

நான் அரசுப் பள்ளியில் படித்ததால் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் கஷ்டம் எனக்குத் தெரியும். அவர்கள் எம்பிபிஎஸ் படிப்பதற்காக 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கியது ஜெயலலிதாவின் அரசு. இந்தாண்டு 495 பேர் மருத்துவப் படிப்பு படித்துவருகின்றனர். அடுத்த ஆண்டு 600 மாணவர்கள் மருத்துவப் படிப்பு படிப்பார்கள். அதுபோன்ற சூழ்நிலையை நாம் உருவாக்குவோம்.

சிறு தொழில்கள் செழிப்பு

பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடர்ந்து கோரிக்கைவைத்ததை அடுத்து விருதுநகர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டப்பட்டு வேலை முடிவடையும் நிலையில் உள்ளது.

இந்த மாவட்டத்தில் மக்கள் நலன்கருதி உயர் அறுவைச் சிகிச்சைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இந்த மருத்துவக் கல்லூரியில் செய்யப்பட்டுள்ளன.

ராஜபாளையம் நகர்ப் பகுதிக்குச் சிறப்பான சாலைகள், குடிநீர், கல்வி, மருத்துவ வசதி, தடையில்லா மின்சாரம் போன்ற வசதிகள் ஜெயலலிதாவின் அரசு செய்துகொடுத்துள்ளது.

இந்தப் பகுதியில் நூற்பாலைகள் நிறைந்து உள்ளன. திமுக ஆட்சியில் இருந்தபோது சிறு தொழில்கள் செய்ய முடியாமல் இருந்தது. தற்போது மின்சாரம் தடையில்லாமல் கிடைப்பதால் நூற்பாலைகள் போன்ற சிறு தொழில்கள் செழிப்பாக நடைபெற்றுவருகின்றன.

அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்

நான் முதலமைச்சராக இல்லாமல் உங்களில் ஒருவனாகக் கூறுகிறேன். அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு எதிர்ப்புச் சக்தியை உருவாக்கிக் கொள்ளுங்கள். கரோனா நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள் உங்களை இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன்.

திமுக தலைவர் ஸ்டாலின் எல்லா இடங்களிலும் நான் போலி விவசாயி எனப் பேசிவருகிறார். நான் ஒரு விவசாயி என்று சொன்னால் அவருக்குப் பொறுக்க முடியவில்லை.

கிராமப் பகுதியில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். நகர்ப் பகுதியில் வாழும் மக்களுக்கு அடுக்குமாடி வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்.

இவ்வாறு முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.

இதையும் படிங்க: ’தமிழ்நாட்டில் மோடி மஸ்தான் வேலை எடுபடாது’ - ஸ்டாலின்

Last Updated : Mar 27, 2021, 11:14 AM IST

ABOUT THE AUTHOR

...view details