தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வயிற்றுப்பசி மட்டுமல்லாமல் மாணவர்களின் அறிவுப்பசியையும் போக்கும் சிவகாசி ஆசிரியை!

விருதுநகர்: தன்னார்வலர்களின் உதவியுடன் நாள்தோறும் ஏழை மாணவர்களின் பசியை போக்குவதோடு, அவர்களுக்கு பாடமும் கற்பிக்கும் ஆசிரியை ஜெயமேரியின் தன்னலமற்ற செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

வயிற்றுப்பசி மட்டுமல்லாமல் மாணவர்களின் அறிவுப்பசியையும் போக்கும் சிவகாசி ஆசிரியை!
teacherவயிற்றுப்பசி மட்டுமல்லாமல் மாணவர்களின் அறிவுப்பசியையும் போக்கும் சிவகாசி ஆசிரியை!

By

Published : Aug 13, 2020, 8:30 PM IST

Updated : Aug 27, 2020, 12:44 PM IST

கரோனா வைரஸ் பரவல் காரணமாக விதிக்கப்பட்ட பொது ஊரடங்கால் கடந்த நான்கு மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. மூடியே கிடக்கும் பள்ளிகளால், மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர் கவலையடைகின்றனர். கரோனா நெருக்கடி ஏழை மாணவர்களுக்கு ஒருபக்கம் வயிற்றுப்பசிக்கும், மறுபக்கம் அறிவுப்பசிக்கும் இடர்ப்பாடுகளை ஏற்படுத்தி வருகிறது.

கிராமங்களில் கூலித் தொழிலாளியாக உள்ள மக்கள் ஊரடங்கால் வேலை வாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். ஒருவேளை சாப்பிட்டிற்கே வழி இல்லாத நிலையில், குழந்தைகளின் கல்வியைப் பற்றி அவர்களால் எப்படி சிந்திக்க முடியும். இந்தச் சூழலில் தான் ஏழை மாணவர்களின் பசியைப் போக்கி, அவர்களுக்கு கல்வி கற்பித்து வருகிறார், தாயில்பட்டியைச் சேர்ந்த ஆசிரியை ஜெயமேரி.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள தாயில்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயமேரி. இவர் மடத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

கரோனாவால் வீட்டில் உள்ள குழந்தைகளின் கல்விக்கு சமூக வலைதள நண்பர்களுடன் ஜெயமேரி உதவிகோரியபோது, அந்த நண்பர்கள் நன்கொடையாக கதைப் புத்தகங்களை வழங்கியுள்ளனர். இதனை வைத்து குழந்தைகளின் கற்பனைத் திறனை வளர்க்க முடியும் என்று ஜெயமேரிக்கு நம்பிக்கை பிறந்துள்ளது.

கதைகளால் வளர்ந்தது தான், நம் சமூகம். முன்னொரு காலத்தில் ஒரு மன்னன் என கதையாக மாணவர்களுக்குக் கூறினால், அவர்களின் மனதில் அந்தக் கதைகள் பசுமரத்து ஆணி போல் பதியும் என்பதால், பட்டாசுத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு முகக்கவசத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி கதைகள், பாடல்கள், ஓவியங்கள் என பல்திறன் பயிற்சிகளை வழங்கி வருகிறார். குழந்தைகளின் கற்றல் மொழிக்கு ஏற்ப பாடல் வழியே, நீதிக்கதைகளை கற்பித்து குழந்தைகளை உற்சாகப்படுத்துகிறார். இதனால் வீட்டிற்குள் சோர்வடைந்து இருந்த குழந்தைகள், புத்துணர்ச்சியுடன் கதை சொல்லி மகிழ்கின்றனர்.

வயிற்றுப்பசி மட்டுமல்லாமல் மாணவர்களின் அறிவுப்பசியையும் போக்கும் சிவகாசி ஆசிரியை!

செவிவழி கற்றலோடு சேர்த்து குழந்தைகளின் பசியையும் போக்குவதற்கு முடிவு செய்துள்ளார், ஆசிரியை ஜெயமேரி. இதனை சமூக ஆர்வலர்கள், சமூக வலைதள நண்பர்கள் ஆகியோருடன் சேர்ந்து முன்னெடுத்துள்ளார். இதன் பலனாக தாயல்பட்டி கிராமத்து குழந்தைகளுக்கு வாரம் இருமுறை ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை போன்ற பழங்கள் வழங்கப்படுகிறது.

அந்தச் செயல் தாயில்பட்டியிலிருந்து 2 கிலோ மீட்டர் அருகிலுள்ள மடத்துப்பட்டியில் மாணவ - மாணவியருக்கும் தொடர்ந்துள்ளது.

இதுகுறித்து ஆசிரியை ஜெயமேரி பேசுகையில், "பெரும்பாலும் தன்னுடைய மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் பட்டாசுத் தொழிலாளர்களாகவும், தூய்மைப் பணியாளர்களாகவும் இருக்கிறார்கள்.

தற்போது, கரோனாவால் வேலை வாய்ப்பிழந்த நிலையில், நாள்தோறும் 30 குழந்தைகளுக்கு உணவு கொடுத்தேன். பின் என்னுடன் நண்பர்களும், பல தன்னார்வ அமைப்புகளும் இணைந்தன. இவர்களின் உதவியோடு 100 குழந்தைகளுக்கு உணவளிக்கிறோம். அந்தக் குழந்தைகளின் பெற்றோருக்கும் காய்கறி, மளிகைப் பொருள்கள், அரிசி, பருப்பு, எண்ணெய் போன்றவற்றையும் அவ்வப்போது வழங்குகிறோம்" என்றார்.

விடுமுறை தானே என்று வீட்டில் இருக்காமல், குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு, களத்தில் பணியாற்றும் ஜெயமேரியைப் போல் மற்றவர்களும் முன்வந்தால், குழந்தைகளின் கல்வியில் எந்த நெருக்கடியிலும் எவ்வித இடையூறுகளும் ஏற்படாது.

இதையும் படிங்க:நானே முதலமைச்சர் வேட்பாளர்: இரட்டை இலை இல்லாமல் எடப்பாடியால் ஜெயிக்க முடியுமா - கே.சி. பழனிசாமி

Last Updated : Aug 27, 2020, 12:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details