விருதுநகர்: ஒருங்கிணைந்த விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 380 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அரசு மருத்துவ கல்லூரியில் முற்கட்டமாக, நடப்பாண்டில் 150 மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெற உள்ளது. கட்டிடப் பணிகள் நிறைவடைந்த நிலையில், மருத்துவ கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தலைமையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.
2995.32 கோடி ஒதுக்கீடு
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவகல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்து 2 ஆயிரத்து 145 கோடி வழங்கியது. மாநில அரசு ஆயிரத்து 850.32 கோடி வழங்கியது. இதில் பணிகள் விரைந்து நடைபெற்று நடப்பாண்டு நீலகிரி, கள்ளக்குறிச்சி மற்றும் விருதுநகரில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது என்றார்.
தேசிய மருத்துவக் குழுமம் ஒப்புதல்
மிகக்குறுகிய காலத்தில் மருத்துவ கல்லூரியை தயார் செய்து தேசிய மருத்துவ குழுமத்திடம் ஒப்புதல் பெறப்பட்டு 450 கூடுதல் சீட் பெற்றது பாராட்டுக்கு உரியது என்றார். மீதமுள்ள கல்லூரிகளுக்கு ஒப்புதல் பெற போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். 2 ஆண்டுகளுக்கு பிறகு மருத்துவ கல்லூரியில் மருத்துவமனை தொடங்க தற்போதே அதற்கான ஆயத்த பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.