தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் சிவகாசி மற்றும் சாத்தூா் பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில், அதன் உற்பத்தி வேகமாக நடைபெற்று வருகிறது. அதேபோல் பட்டாசு விற்பனையும் தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்து உள்ளது. இந்த நிலையில், இந்தாண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு விதவிதமான பரிசுப் பெட்டிகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.
தீபாவளி பண்டிகை தினத்தன்று நம் வீட்டிற்கு வரும் உறவினா்கள் மற்றும் நண்பா்களுக்கு இனிப்புப் பலகாரம் சோ்த்து, பட்டாசு பரிசுப் பெட்டிகளை கொடுக்கும் கலாசாரம் ஆண்டுக்கு ஆண்டு பெருகி வருகிறது. அது மட்டும் இல்லாமல் பெரிய பெரிய வணிக நிறுவனங்கள் தங்களுடைய நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு தீபாவளி போனஸ் உடன் சோ்த்து பட்டாசு பெட்டிகளையும் கொடுப்பதும் வழக்கமாகி வருகின்றது. அதேபோல் கிராமங்களில் தீபாவளி சீட்டு நடத்துபவா்கள் தங்களுடைய வாடிக்கையாளா்களுக்கும், ஜவுளிக் கடைகள் அதிக அளவில் துணி எடுக்கும் வாடிக்கையாளா்களுக்கும் பட்டாசு பரிசுப் பெட்டிகள் கொடுத்து கொண்டாடுகின்றனர்.