திருச்சுழி அருகே எம்.ரெட்டியாபட்டி கிராமத்தில் 50 படுக்கைகள் கொண்ட கரோனா சிகிச்சை மையத்தை தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார். பின்பு, மருத்துவ பணியாளர்களுடன் தொற்று பரவல் ஆலோசித்தார்.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ’’ஊரடங்கினால் மக்கள் நடமாட்டம் குறைவதால் கரோனா பரவல் குறைய வாய்ப்புள்ளது. மற்ற மாநிலங்களில் கரோனா பரவல் உச்சத்தில் சென்று குறைந்துள்ளது. கிராமங்களில் கரோனா பாதிப்பு உச்சத்தை அடைந்தால், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.
இதையடுத்து, ஆக்சிஜன் தேவை குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், "ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி மீண்டும் தொடங்கியுள்ளது. நேற்று முந்தினம் (மே.21) மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் அனுப்பபட்டுள்ளன. தேவையான இடங்களுக்கு ஆக்சிஜன் அனுப்பும் பணியினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டுள்ளார். ஆக்சிஜனை எடுத்துச் செல்லப் பயன்படும் கிரையோஜெனிக் கண்டெய்னர்கள் நாளை சீனாவில் இருந்து வர உள்ளது.
அந்த காலி கண்டெய்னர்களை ரூப்கேலா, ஜாம்செட்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பி நாம் திரவ ஆக்சிஜனை பெற முடியும். ஆக்சிஜனை கொண்டு வருவதற்கு அத்தியாவசிய தேவையாக கிரையோஜெனிக் டேங்கர்கள், காலி சிண்டர்கள் உள்ளன. அதை சிப்காட் மூலமாகவும் தொழில் துறை மூலமாகவும் மருத்துவ சேவை கழகத்தின் மூலமாகவும் பெற்றுக் கொண்டிருக்கிறோம்’’ எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆண் குழந்தைக்குத் தாயான பாடகி ஸ்ரேயா கோஷல்!