ஊதிய உயர்வு கோரிக்கை; விசைத்தறி தொழிலாளர்கள் கஞ்சித் தொட்டி திறந்து போராட்டம் விருதுநகர்:ராஜபாளையத்தில் கூலி உயர்வு கேட்டு கடந்த ஒரு வாரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கண்டுகொள்ளாத அரசை கண்டித்து கஞ்சித் தொட்டி போராட்டத்தை விசைத்தறி தொழிலாளர்கள் இன்று (பிப்.6) நடத்தினர். ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு கோரி ஊர்வலமாக வந்து உரிமையாளர்கள் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் பருத்தி சேலை உற்பத்தி செய்யும் சுமார் 600 விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இந்த தறிகளை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் 1500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலி உயர்வு குறித்து ஒப்பந்தம் போடப்படும். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னதாக, போடப்பட்ட ஒப்பந்தம் கடந்த 2021ஆகஸ்டு மாதத்துடன் முடிவடைந்து விட்டது. ஒப்பந்தம் காலாவதியாகி இதுவரை 18 மாதங்கள் ஆகியும் இதுவரை புதிய கூலி உயர்வு வழங்கப்படவில்லை. இதுகுறித்து ஶ்ரீ பத்திரகாளியம்மன் விசைத்தறி துணி உற்பத்தியாளர் சங்கம் மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை எனத் தெரியவருகிறது.
எனவே, விசைத்தறி உரிமையாளர்களைக் கண்டித்தும், தொழிலாளர் துறை அதிகாரிகளைக் கண்டித்தும், ஏஐடியுசி மற்றும் சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் கடந்த 29ஆம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். செட்டியார்பட்டி கிராம அலுவலருக்கு முன்பாக கஞ்சித்தொட்டி திறக்கும் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் பெண்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: யாசகம் செய்து பெற்ற பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு செலுத்திய பெரிய மனிதர்!