தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
குறிப்பாக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக 47 அடி நீர்மட்ட அளவு கொண்ட பிளவக்கல் பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்து தற்போது அணையின் நீர்மட்டம் 45 அடியை எட்டியுள்ளது.
பிளவக்கல் அணையின் நீர்மட்டம் அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் 130 கனஅடி வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், விவசாய பாசனத்திற்கு நீர் வந்து கொண்டிருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேலும், இப்பகுதியில் உள்ள மற்றொரு அணையான கோயிலாறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்து, 21 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இரண்டு நாள்களில் எட்டு அடி உயர்ந்துள்ளது. 42 அடி முழு நீர்மட்ட அளவு கொண்ட அணையில் தற்போது 29 அடியை எட்டியுள்ளதாலும் அணை வேகமாக நிரம்பி வருவதாலும் இந்த அணையை நம்பியுள்ள விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.
இதையும் படிங்க: 40 ஆண்டுகளுக்குப் பிறகு முழு கொள்ளளவை எட்டிய பவானிசாகர் அணை!