விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே மாந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பால்மயில். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர் விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றை இன்று (நவ. 2) அளித்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
மாந்தோப்பு பகுதியிலுள்ள தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிடர் மக்களுக்கென்று அரசால் ஒதுக்கப்பட்ட கிணறு ஒன்று உள்ளது.
அந்த கிணற்றையும் அதனை சுற்றியுள்ள இடத்தையும் கடந்த 70 வருடங்களாக மாந்தோப்பு பகுதி மக்கள், குடிநீர் தேவை முதல் பல்வேறு பயன்பாடுகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
இதையடுத்து மாந்தோப்பு ஊராட்சி மன்ற தலைவர் காளிஸ்வரி என்பவரும் அவரது கணவர் சரவணனும், அவர்களுக்கு சொந்தமான ஜேசிபி வண்டியை வைத்து கடந்த அக்டோபர் 20ஆம் தேதி இரவு 10 மணிக்கு மேல் கிணறு முழுவதையும் மூடிவிட்டு , அதனை சுற்றியுள்ள இடத்தை சேர்த்து அத்துமீறி மண் போட்டு ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டி அக்டோபர் 22ஆம் தேதி மாந்தோப்பு ஆதிதிராவிட பொதுமக்கள் சார்பாக காரியாபட்டி வட்டாட்சியர் மற்றும் அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும், மனு கொடுத்ததை அறிந்த ஊராட்சி மன்ற தலைவரும், அவருடைய கணவரும் மாந்தோப்பு பகுதி மக்களை சாதி ரீதியாக பேசியதோடு கொலை மிரட்டலும் விடுத்தனர்.
எனவே பொதுமக்கள் பயன்படுத்தி வந்த அந்த கிணற்றை மீட்டு தருவதோடு, ஊராட்சி மன்ற தலைவர் காளிஸ்வரி, அவரது கணவர் சரவணன் மற்றும் கிணற்றை ஆக்கிரமிப்பு செய்வதற்கு உறுதுணையாக இருந்து வரும் கிராம நிர்வாக அலுவலர் ரஞ்சித்குமார், தலையாரி ஆறுமுகம் ஆகியோர் மீது வன் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.