நாடு முழுவதும் கரோனா வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததையடுத்து பாதுகாப்புப் பணியில் இரவு, பகல் பாராமல் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். தினந்தோறும் பாதுகாப்புப் பணியில், தனது குடும்பத்தையும் மறந்து வெயில், மழையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்களுக்காக காவல் துறையினர் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் கரோனா விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட காவல் துறையினரை கெளரவிக்கும் விதமாக, சாத்தூர் ஹோட்டல், மற்றும் பேக்கரி, மார்க்கெட் வியாபாரிகள், ஸ்வீட் ஸ்டால் சங்கத்தினர் இணைந்து சாத்தூர் நகர காவல் துணைக் காண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன், காவல் ஆய்வாளர் சுப குமார் மற்றும் சுமார் 150க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு பொன்னாடை அணிவித்தும் இனிப்பு வழங்கியும் கெளரவித்தனர்.
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய காவல் துறை துணைக் கண்கணிப்பாளர் ராமகிருஷ்ணன், வருகின்ற 07.05.2020 அன்று முதல் (டாஸ்மாக்) அரசு மதுபானக் கடைகள் காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை செயல்படும் என்றும், அப்போது மதுபானப் பிரியர்கள் அனைவருக்கும் டோக்கன் முறையில் அனுமதிக்கப்படுவதாகவும், ஒரு நபருக்கு குறிப்பிட்ட அளவே மது பானங்கள் விற்கப்படும் என்றும் கூறினார்.