விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காந்திநகரில் புதிதாக திறக்கப்பட்ட தனியார் உணவகம் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக ஒரு பிரியாணி வாங்கினால் ஒரு பிரியாணி இலவசம் என விளம்பரம் செய்திருந்தது.
தனிமனித இடைவெளியில்லாமல் பிரியாணி வாங்க குவிந்த மக்கள் - புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடை
விருதுநகர்: அருப்புக்கோட்டையில் புதிதாக திறக்கப்பட்ட உணவகத்தில் தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் பிரியாணி வாங்க குவிந்த பொதுமக்களால் கரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் விளம்பரத்தை பார்த்து முதல் ஆளாக பிரியாணி வாங்கிவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் முகக்கவசம் கூட அணியாமல் அந்த உணவகத்தின்முன் குவிந்தனர்.
உணவகத்தின் கதவுகள் திறக்கப்பட்டதும் பிரியாணியை வாங்க பொதுமக்கள் ஒருவரை ஒருவர் முண்டியடித்துக்கொண்டு கூட்டமாக உள்ளே நுழைந்து கரோனாவை மறந்து வாங்கிச்சென்றனர்.
கரோனாவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பொது இடங்களிலும் வணிக வளாகங்களிலும் உணவகங்களிலும் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் கட்டாய முகக்கவசம் அணிய வேண்டும் என பல கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.
பலரும் அரசின் விதிமுறைகளை பின்பற்றி வரும் நிலையில், தங்களுடைய சுயலாபத்திற்காக இதுபோன்ற சிலர் செய்யும் செயல்களால் கரோனா தீவிரமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே இது போன்று அரசின் உத்தரவை மீறி செயல்படும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.