மதுரை கருப்பாயூரணியைச் சேர்ந்த ஆறுமுகச்சாமி என்பவரது மகள் கவிநிலாவிற்கும் சிவகாசியில் உள்ள பிரபல பேக்கரி கடையின் உரிமையாளர் ஜெயச்சந்திரன் என்பவரது மகன் துளசி ராமிற்கும் 2016ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.
திருமணத்தின்போது 230 சவரன் நகை வழங்கியதுடன் வளைகாப்பு உள்ளிட்ட நிகழ்வின்போது 45 சவரன் நகையும் வரதட்சணையாக வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தம்பதிக்கு 2 வயதில் ஆண் குழந்தையும் 9 மாத பெண் குழந்தையும் உள்ள நிலையில் கணவர் துளசி ராம் தொடர்ந்து மனைவி கவிநிலாவை துன்புறுத்திவந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கவிநிலா தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டு கணவர் வீட்டிற்குச் செல்லாமல் இருந்து வந்ததாகவும் பின்னர் கடந்த மாதம் கவிநிலாவின் பெற்றோர் வரதட்சணையாக 45 லட்சம் ரூபாய் பணத்தை இன்னும் சில மாதங்களுக்குள் வழங்குவதாக உறுதியளித்து மகளை சிவகாசியில் உள்ள கணவர் வீட்டில் விட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி கவிநிலா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக போன் மூலம் பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பெற்றோர் அங்கு சென்று பார்த்தபோது வீட்டிற்கு வெளியே நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரில் உயிரிழந்த நிலையில் கவிநிலாவின் உடல் வைக்கப்பட்டிருந்தது.