விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அரசுப் பணியாளர் குடியிருப்பில் வசித்துவருபவர் அமல்ராஜ் (24). இவருக்கும் இவரது மனைவி சுஷ்மிதா (19) என்பவருக்கும் 11 மாதத்தில் விகாஸ் என்ற மகன் இருந்தார்.
இந்நிலையில், சென்ற 5ஆம் தேதி, வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் விகாஸ் தவறுதலாக மூழ்கிவிட்டதாகவும், பின்னர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் காவல் துறையினருக்கு சுஷ்மிதா தகவல் தெரிவித்துள்ளார்.
அதன்பேரில் காரியாபட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் மகன் இறப்பு தொடர்பான வழக்கின் முதல் தகவல் அறிக்கையைப் பெறுவதற்காகக் கணவன் - மனைவி இருவரும் காவல் நிலையத்துக்குச் சென்றுள்ளனர்.
அப்போது, இருவரின் நடவடிக்கைகளைப் பார்த்து சந்தேகமடைந்த காவல் துறையினர், விசாரிக்க வேண்டிய விதத்தில் தங்களின் விசாரணையை மேற்கொண்டனர். அதில் விகாஸ் உயிரிழப்பு தொடர்பான பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது, சென்ற 2018ஆம் ஆண்டு காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுஷ்மிதா 12ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது அதே ஊரைச் சேர்ந்த மரிய லூகாஸ் (50) என்பவரது மகன் அமல்ராஜுடன் காதல் மலர்ந்துள்ளது. இருவரது காதலின் விளைவாக சுஷ்மிதா கர்ப்பம் தரித்துள்ளார். இதற்கிடையே அவர் ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தது பள்ளி ஆசிரியர்களுக்கு தெரியவந்ததையடுத்து, சுஷ்மிதாவின் தந்தை சூசை மாணிக்கத்தை (45) அழைத்து விவரங்களைத் தெரிவித்ததுடன், அனைத்து சான்றிதழ்களையும் ஒப்படைத்து பள்ளியை விட்டும் ஆசிரியர்கள் நிரந்தரமாக வெளியேற்றிவிட்டனர். பின்னர், இரு வீட்டார் சம்மதத்துடன் சுஷ்மிதாவிற்கும் அமல்ராஜுக்கும் திருமணம் நடைபெற்று அவர்களுக்கு அழகிய ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. அந்த இடத்தில்தான் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சொத்துத் தகராறில் மகனை வெட்டிப் படுகொலை செய்த தந்தை
இந்தக் குழந்தை எனக்கு பிறந்ததே இல்லை என்று ஒரே போடாகப் போட்டுள்ளார் அமல்ராஜ். காதலித்து கரம்பிடித்தவரே இவ்வாறு கூறிவிட்டதை ஏற்க முடியாத சுஷ்மிதா, மனவேதனையுடன் இருந்துள்ளார். குழந்தை பிறந்து 7 மாதங்களாகியும் அமல்ராஜ் மற்றும் அவரது பெற்றோர் குழந்தையைப் பார்க்க வரவில்லை என்று தெரிகிறது.
இதையடுத்து அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சுஷ்மிதா புகார் அளித்துள்ளார். அதனை விசாரித்த காவல் துறையினர், இருவரையும் அழைத்து ஒழுங்காகச் சேர்ந்து வாழுங்கள் என்று அறிவுரை கூறி அனுப்பியுள்ளனர். ஆனால் அவர்களுக்குள் மீண்டும் தகராறு வரவே இந்த பிரச்னை மதுரை சரக டிஐஜி காதுகளுக்குச் சென்றுள்ளது. அவர் இதுகுறித்து விசாரிக்க மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளருக்கு பரிந்துரைக்க, அவர் இருவரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, தைப்பொங்கலை ஒன்றாகக் கொண்டாடுங்கள் என்று கூறி அமல்ராஜ் வீட்டிற்கு சுஷ்மிதாவையும், குழந்தையையும் அனுப்பி வைத்துள்ளனர்.
குழந்தையைக் கொன்றுவிட்டு நாடகம்; தம்பதி வெறிச்செயல் ஆனால், பிரச்னை ஓய்ந்தபாடு இல்லை. இதற்கு ஒரு முடிவு ஏற்பட வேண்டுமென்றால் குழந்தை இருக்கக்கூடாது என்றும், குழந்தைதான் நமக்குள் பிரச்னை எனவே ஆக வேண்டியதைப் பார் என்றும் சுஷ்மிதாவை அமல்ராஜ் நிர்பந்தித்துள்ளார். இதையடுத்து அமல்ராஜ் முன்னிலையில் குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்த சுஷ்மிதா, குழந்தை விகாஸ் தண்ணீரில் விழுந்து உயிரிழந்துவிட்டதாகக் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதையெல்லாம் கேட்டு அதிர்ச்சியடைந்த காவல் துறையினர், இருவரையும் கைது செய்ததுடன், கொலையை மறைத்து உடந்தையாக இருந்த குற்றத்திற்காக அமல்ராஜின் பெற்றோரான மரிய லூகாஸ், விமலா (47), சுஷ்மிதாவின் தந்தை சூசை மாணிக்கம் ஆகியோரையும் சேர்த்து கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: கொலை செய்த காட்சியை சமூக வலைதளங்களில் பரப்பிய கொடூரம்!