ஊராட்சி மன்ற ஒன்றியக் குழு கூட்டம்: அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு - ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம்
விருதுநகர்: ஊராட்சி மன்ற ஒன்றியக் குழு கூட்டத்தில் கேள்விகளுக்கு ஊராட்சி மன்ற தலைவர் முறையாக பதில் அளிக்கவில்லை என அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் ஊராட்சி மன்ற ஒன்றியக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு கூட்டுப்பொருள் பற்றி விவாதிக்கப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்றியக் கவுன்சிலர்கள் கூறுகையில், ஊராட்சி ஒன்றிய வளர்ச்சித் திட்டம் பணிகளில் ஒன்றிய கவுன்சிலர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் வளர்ச்சித் திட்டப்பணிகளில் மக்கள் தொண்டாற்ற கவுன்சிலர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என வாதிட்டனர்.
மேலும் பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்படும் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த விளக்கங்களை அறிவிக்கவேண்டும் எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
பஞ்சாயத்து வளர்ச்சித் திட்டபணிகளில் கட்டப்பட்டும் கட்டடங்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், குடிநீர் குழாய் வழித்தடங்கள் ஆகியவை சீக்கிரமே பழுதடைந்துவிடும் நிலையிலேயே செய்யப்படுவதாக குற்றஞ்சாட்டினர்.
நீர் உறிஞ்சுகுழி பணி ஒதுக்குவதில் கட்சி பாகுபாடு காட்டப்படுவதாகவும் நிதியானது பயனாளிகளுக்கு நேரடியாக கணக்கில் செலுத்தப்படவில்லை என்றும் அலுவலர்கள் மீது குற்றஞ்சாட்டினர்.
கிருமிநாசினி, முகக் கவசம் வாங்கியதில், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதில் இரண்டு முறைகளுக்கும் நிதி வேறுபாடு உள்ளதற்கான காரணத்தைக் கேட்டனர்.
தங்கள் கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்கவில்லை என்று அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.