தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தலைமுறைகள் கடந்து ருசியால் கிறங்கடிக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு கிடைத்த கெளரவம்! - Milk sweets in india

விருதுநகர்: 1940களிலிருந்து பால்கோவா உற்பத்தி பணி நடைபெற்று வரும் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியிருப்பதால், பால்கோவா வியாபாரம் முன்னேற்றம் அடையும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா

By

Published : Sep 10, 2019, 10:32 PM IST

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு புவிசார் குறியீடு கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக பால்கோவா தயாரிப்பாளர்கள், பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் அடிவாரத்தில் தமிழக அரசு முத்திரையில் இடம் பெற்றுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில், மாநில அளவில் பிரசித்தி பெற்றதாக இருக்கிறது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயிலுக்கு அடுத்தபடியாக, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா உலக அளவில் பிரசித்தி பெற்றதாகத் திகழ்கிறது. இதன் காரணத்தினால் 'பால்கோவா நகரம்' என்ற பெயரிலும் ஸ்ரீவில்லிபுத்தூர் அழைக்கப்படுகிறது. 1940களிலிருந்து பால்கோவா உற்பத்தி பணி ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்துவருவதே இப்பெயருக்குக் காரணமாக அமைகிறது.

நகரின் பெரும்பாலான இடங்களை பால்கோவா கடைகளே ஆக்கிரமித்திருக்கின்றன. இங்குள்ள பால்கோவாவின் தனிச்சுவைக்கு காரணமாக, கறவை மாடுகளுக்கு அளிக்கப்படும் உணவும், அதிலிருந்து பெறப்படும் பாலும் தயாரிப்பு முறைகளுமே காரணமாகத் திகழ்வதாக பால்கோவா தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்கோவா, பால் அல்வா, இனிப்பு இல்லா பால்பேடா என மூன்று வகைகளில் இனிப்பு வகைகள் தயாரிக்கப்படுகிறது. அதில் மிகவும் புகழ்பெற்றது அனைவரையும் கவரக்கூடியது பால்கோவா தான்.

பண்டிகை காலங்கள் மட்டுமின்றி, வருடத்தின் அனைத்து நாட்களிலும் தொடர்ந்து இப்பகுதியில் இருக்கும் கடைகளுக்கு ஆர்டர்கள் வருவதுடன், உள்நாடு மற்றும் வெளிநாடு என உலகம் முழுவதும் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ஆண்டாள் கோயிலுக்கு தரிசனம் செய்ய ஸ்ரீவில்லிபுத்தூர் வரும் சுற்றுலா பயணிகள், மறக்காமல் பால்கோவாவை ருசித்து செல்வதும், வாங்கிச் செல்வதும் அன்றாட நிகழ்வாக இருந்து வருகிறது.

குழந்தைகள் முதல் பெரியவர் வரை என அனைத்து வயதினரும் விரும்பி உண்ணும் பால்கோவாவுக்கு மத்திய அரசு சார்பில் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. பல தலைமுறைகள் கடந்தாலும் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவின் மாறாத சுவையின் காரணமாக இந்த கெளரவம் கிடைத்திருப்பதாக பெருமையுடன் கூறும் பால்கோவா தயாரிப்பாளர்கள், தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா அழியாத சின்னமாக மாறிவிட்டதாகவும் பூரிப்படைகின்றனர்.

தலைமுறைகள் கடந்து மாறாத சுவையை அளித்து வரும் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா

ABOUT THE AUTHOR

...view details