தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மூளைச்சாவு அடைந்த தூய்மை பணியாளர் உடல் உறுப்புகள் தானம்: மாரியப்பன் உடலுக்கு மருத்துவர்கள், பொதுமக்கள் அஞ்சலி!

Tamil Nadu organ donation: விருதுநகர் அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த தூய்மை பணியாளரின் உடல் உறுப்புகள், அவரது உறவினர்களின் சம்மதத்துடன் தானம் செய்யப்பட்டது. உடல் உறுப்புகளை தானம் செய்த மாரியப்பனின் உடலுக்கு மருத்துவர்கள், பொதுமக்கள் மரியாதை செலுத்தினர்.

உடல் உறுப்புகள் தானம் செய்த தூய்மை பணியாளருக்கு அரசு மரியாதையுடன் அடக்கம்
உடல் உறுப்புகள் தானம் செய்த தூய்மை பணியாளருக்கு அரசு மரியாதையுடன் அடக்கம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 10, 2023, 9:02 PM IST

மாரியப்பன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மருத்துவர்கள்

திருநெல்வேலி: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள முகவூர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பாக்கியம். இவரது மகன் மாரியப்பன். இவர் ராஜபாளையம் நகராட்சி அலுவலகத்தில், தற்காலிக தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 7-ந்தேதி, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில், தலையில் பலத்த காயம் அடைந்தார்.

தொடர்ந்து அவரை அந்த வழியாகச் சென்றவர்கள் மீட்டு, ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து அன்று(அக்.07) நள்ளிரவே, நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று(அக்.09) மாலை அவர் மூளைச்சாவு அடைந்தார்.

இதனையடுத்து விபத்தில் மூளைச்சாவு அடைந்த மாரியப்பனின் உடல் உறுப்புகள், அவரது உறவினர்களின் சம்மதத்துடன், தானம் செய்யப்பட்டது. அவரது உடலிலிருந்து எடுக்கப்பட்ட கல்லீரல் சென்னை அப்போலோ மருத்துவமனைக்கும், சிறுநீரகம் ஒன்று மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கும், மற்றொன்று சிறுநீரகமும், இரண்டு கண்களும் நெல்லை அரசு மருத்துவமனைக்கும் தானமாகக் கொடுக்கப்பட்டன.

முன்னதாக உடல் உறுப்புகளை தானம் செய்வோரின் தியாகத்தைப் போற்றிடும் வகையில், உடல் உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்ற முதலமைச்சர் ஸ்டாலினின் அறிவிப்புப்படி, மாரியப்பனின் உடலுக்கு அரசு வழிகாட்டுதலின்படி அரசு மரியாதை செய்யப்பட்டது. இதற்காக அவரது உடல் அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்திற்குக் கொண்டுவரப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் மருத்துவக்கல்லூரி முதல்வர் ரேவதி கலந்து கொண்டு மலர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். அப்போது மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் டாக்டர் பாலசுப்ரமணியன், டாக்டர் முகமது ராபி மற்றும் பயிற்சி மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் உள்ளிட்டோரும் உடனிருந்து மரியாதை செலுத்தினர். இதனையடுத்து அவரது உடல் மருத்துவமனையிலிருந்து, அவரது சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

அப்போது மருத்துவக்கல்லூரி முதல்வர் ரேவதி மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரியின் மாணவர்கள் அனைவரும் இறுதி யாத்திரை வாகனத்திற்குப் பின் மருத்துவமனை வளாகம் வரை நடந்து சென்றது, அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சி அடைய செய்தது.
உடல் உறுப்புகள் தானம் செய்த நபருக்கு மருத்துவக்கல்லூரி சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்வு தமிழ்நாட்டிலேயே நெல்லையில்தான் முதன்முதலில் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:இஸ்லாமியர்கள் மீது ஏன் அதிமுகவிற்கு திடீர் அக்கறை? முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி.. கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி..!

ABOUT THE AUTHOR

...view details