விருதுநகர் மாவட்டம் பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகளில் இருந்து முதல்போக பாசனத்துக்காக இன்று (நவம்பர் 5) முதல் நவம்பர் 28ஆம் தேதி வரையிலும், ராஜபாளையம் அருகே உள்ள சாஸ்தா கோயில் அணையில் இருந்து இன்று முதல் நவம்பர் 12ஆம் தேதி வரையிலும் அணைகளின் நீர் இருப்பு, நீர் வரத்து, நீர் தேவையின் அடிப்படையில் தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.
பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகளிலிருந்து தண்ணீர் திறப்பு - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
விருதுநகர்: பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு உள்ளிட்ட அணைகளில் இருந்து முதல்போக பாசனத்துக்காக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மலர்தூவி தண்ணீரை திறந்து வைத்தார்.
![பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகளிலிருந்து தண்ணீர் திறப்பு periyar-and-kovilaru-dams](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9441640-thumbnail-3x2-water.jpg)
அதன்படி, பிளவக்கல், பெரியாறு, கோவிலாறு, சாஸ்தா கோயில் ஆகிய அணைகளில் இருந்து முதல்போக பாசனத்துக்காக விருதுநகர் ஆட்சியர் கண்ணன் தலைமையில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மலர்தூவி தண்ணீரை திறந்து வைத்தார். பெரியாறு, கோவிலாறு அணைகள் முறையே 13.90 சதுர மைல், 9.57 சதுர மைல் நீர்ப்பிடிப்பு பகுதி கொண்டவை. பிளவக்கல் பாசனத் திட்டத்தின் மூலம் 8531.17 ஏக்கர் (3452.515 ஹெக்டேர்) நிலங்கள் பாசன வசதி பெறும்.
சாஸ்தா கோயில் நீர்த்தேக்கத்தால் 11 கண்மாய்கள் பயனடைகின்றன. சாஸ்தா கோயில் நீர்த்தேக்கத்தின் நீர்ப்பிடி பரப்பளவு 0.308 சதுர மைல், நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 36.47 மி.க.அடி ஆகும். நீர்த்தேக்கத்தால் 3130.68 ஏக்கர் நிலம் பயனடையும். மேலும், வடகிழக்கு பருவமழை தொடரும் பட்சத்தில் அணைகளுக்கு வரும் நீரின் ஆழத்தை பொறுத்து பருவ காலம் வரை அனைத்து கண்மாய்களுக்கும் தண்ணீர் பகிர்ந்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக பொதுப்பணித்துறை அலுவலர்கள் கூறினர்.