ராஜபாளையம்: சட்டப்பேரவைத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ராஜபாளையம் தொகுதியில் காளிமுத்து என்பவர் போட்டியிடுகிறார்.
இவரை ஆதரித்துப் பரப்புரை செய்வதற்காக அமமுகவின் பொதுச்செயலாளர் தினகரன் நேற்று ராஜபாளையம் வந்தார். இதற்காக நேற்று மாலை 5 மணி முதல் ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனை முன்பு தொண்டர்களைத் திரட்டிவைத்திருந்தனர்.
டிடிவி தினகரன் இரவு பத்து மணிக்கு அங்கு வந்தடைந்தார். அவர் ஏதுவும் பேசாமல், தொண்டர்களைப் பார்த்து கையசைத்தபடி சென்றார். அப்போது அவரது வாகனத்தின் மீது தொண்டர்கள் முண்டியடித்து ஏறினர். அதில் வாகனத்தில் தொங்கியபடி சென்ற தொண்டர் மோதியதில் பெண்கள் பலர் கீழே விழுந்தனர்.
இந்த நிலையில் கூட்டத்தில் வந்தவர்கள் தங்கள் வாகனங்களில் திரும்பிச் சென்றனர். அப்போது பரப்புரைக்கு ஆள்களை ஏற்றிவந்த வேன் ஒன்று, பிஏசிஆர் அரசு மகப்பேறு மருத்துவமனை முன்பு சுந்தரராஜபுரம் பகுதியில் வேகமாகச் சென்றுகொண்டிருந்தது.
அப்போது, எதிரே வேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று வேன்மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், இருசக்கர வாகனத்தில் வந்த அங்கமுத்து, மணிகண்டன் சாலையில் விழுந்தனர்.
இருவரும் போதையில் இருந்ததாகவும், அதில் அங்கமுத்து தன் இடுப்பில் மதுபாட்டில் வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. வாகனம் மோதி விழுந்ததில் இடுப்பில் இருந்த மதுபாட்டில் உடைந்து வயிற்றில் குத்தியதில் அங்கமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மணிகண்டன் படுகாயமடைந்தார். இந்த விபத்து குறித்து ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க:ஊழல் பெருச்சாளிகளுக்கு இந்தத் தேர்தலில் முடிவு கட்டுங்கள்' - டிடிவி தினகரன்