விருதுநகர்:மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (நவ.19) விருதுநகர் அரசு மருத்துக்கல்லூரி கலையரங்கில் பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் விழாவை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் 25 பயனாளிகளுக்கு கடன் பெறும் காசோலைகளை வழங்கிய சீதாராமன் மேலும் வங்கிகளின் கடன் தொகையை கியூ.ஆர் கோடு மூலம் அதாவது ஆன்லைன் பண பரிவர்த்தனையின் மூலம் சிறப்பாக திருப்பி செலுத்திய மூன்று பயனாளிகளுக்கு அதற்கான சான்றுகளை வழங்கி கெளரவித்தார்.
மேலும் பள்ளி மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை தூண்டும் விதமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 10 அரசுப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு சந்திராயன் 3 மாதிரி லேண்டர் மற்றும் ரோவரை அமைச்சர் வழங்கினார். மேலும், ஆயிரத்து இருநூறுக்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு பிரதமரின் நிதி உதவி திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 71 லட்சத்து 50 கடனுதவி வழங்கி கலந்துரையாடினார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய நிர்மலா சீதாராமன், சாலையோரம் தொழில் புரியும் ஏழை எளியோர் தொழில் செய்ய வசதியாக சலுகை வழங்கி வட்டி இல்லாமல் வாழ்வாதாரம் உயர கொண்டுவரப்பட்ட திட்டம் தான் பி.எம்.ஸ்வாநிதி திட்டம் என்றார்.
இதையும் படிங்க:உலகக் கோப்பை தோல்விக்கான காரணம் குறித்து ரோகித் சர்மா கூறியது என்ன?
தொடர்ந்து பேசிய அவர், இதற்காக 2014 ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்ததும் கடைக்கோடி தொண்டனையும் ஆதரிக்கும் விதமாகவும், அவர்கள் சொந்தமாக தொழில் தொடங்க வாய்ப்பு கொடுக்க அவர்களுக்கு உள்ள பிரச்சனை குறித்து ஆராயப்பட்டது என்றும் இதன் அடிப்படையில் தான் நாடு முழுவதும் 114 மாவட்டங்கள் முன்னேற விளையும் மாவட்டங்களாக கண்டறியப்பட்டு தமிழகத்தில் இராமநாதபுரம், விருதுநகர் தேர்ந்தெடுக்கப்பட்டது என்றார்.
இதில் தனது பெயரிலேயே விருதை கொண்ட விருதுநகர் மத்திய அரசிடம் விருதும் பெற்றுள்ளது பாராட்டுக்குறியது. மேலும் நல்ல திட்டமான ஸ்வாநிதி திட்டத்தில் இன்னும் அதிகமான சாலையோர வியாபாரிகள் பயன்பெற அரசு அலுவலர்களும், மக்களும், செய்தியாளர்களும் இதை முன்னெடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஒருமுறை பேசுகையில் எந்த திட்டத்திலும் 100 ரூபாய் பணம் போட்டால் மக்களுக்கு 15 ரூபாய் தான் போய் சேருகிறது என்றார். ஆனால் தற்போது 100 சதவீதம் பணம் பயனாளிகளுக்கு போய் சேருகிறது. இதற்காக மோடி கொண்டு வந்தது தான் டெக்னாலஜி என்றும் ஒவ்வொரு திட்டமும் பாமரனுக்கு உதவ பார்த்து பார்த்து வடிவமைக்கப்பட்டது என்றார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய நிதித்துறை செயலாளர் விவேக் ஜோஷி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிர்வாக இயக்குநர் அஜய் குமார் ஸ்ரீவத்சா மற்றும் ஐஓபி மேலாளர் சஞ்சய் வினய், மாவட்ட ஆட்சியர் ஜெயசீனல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:சென்னையில் இருந்து டெல்லி சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி வழக்கத்திற்கு மாறாக பயணம்!