விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் முக்கியமான திருத்தலமாகும்.
இங்கு மார்கழி மாதத்தில் 'பகல்பத்து', ராப்பத்து உற்சவம் சிறப்பாக நடைபெறும். கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி முதல் 'ராப்பத்து' உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
ராப்பத்தின் ஒவ்வொருநாளும் பரமபத வாசல் வழியாக எழுந்தருளும் நம்மாழ்வார் சரணாகதியின் மூலம் எம்பெருமான் திருவடி அடைகின்றார்.
பின் உலகில் உள்ளோர் எல்லோரும் தாங்கள் உய்ய ஆழ்வாரை, இந்த நானிலத்திற்கு தந்தருள வேண்டும் என்று விண்ணப்பம் செய்ய அவ்வாறே பெருமாள் அனுகிரகிக்க நம்மாழ்வாரை திருப்பி தருவதாக ஐதீகம்.
ராப்பத்து உற்சவம்
அதன்படி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் 'ராப்பத்து' உற்சவத்தின் பத்தாம் நாளான நேற்று (ஜன. 03) இரவு 'நம்மாழ்வார் மோட்சம்' நடைபெற்றது.
அரையர் அருளப்பாட, பட்டர்கள் நம்மாழ்வாரை குழந்தையைப் போல கைத்தல சேவையால் கையில் தாங்கிச் சென்று ஆழ்வாரை பெருமாளின் திருப்பாத கமலங்களிலே சேர்ப்பித்து சிறிது சிறிதாக திருத்துழாயினால் ஆழ்வார் முழுதும் மறையும் வண்ணம் சூடினர்.
அப்போது, சாம்பிராணி புகையால் பெருமாளும் ஆழ்வாரும் மறைக்கப்படுகின்றனர். இவ்உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மனமுருக தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க:ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா நிறைவு!