அருப்புக்கோட்டை அருகே திருமலைபுரத்தைச் சேர்ந்த முத்துவிஜயன் என்பவரின் மகன் முத்துராமலிங்கம். பிப்ரவரி 24ஆம் தேதி இரவு அரசு மதுபான கடை அருகே அடையாளம் தெரியாத கும்பலால் வெட்டிப் படுகொலைசெய்யப்பட்டார். இக்கொலைச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ரெட்டியாபட்டி காவல் துறையினர் காவல் துணை கண்கணிப்பாளர் சசிதர் தலைமையில் தனிப்படை அமைத்து கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடிவந்தனர்.
இச்சூழலில் கொலைசெய்யப்பட்ட இடத்தின் அருகிலிருந்த கைப்பேசி கோபுரத்தில் பதிவான அழைப்புகளை ஆராய்ந்து சந்தேகத்தின் அடிப்படையில் கொலைசெய்யப்பட்ட முத்துராமலிங்கத்தின் நண்பர்களான கிரிநாத், அய்யனார் ஆகியோரைத் தீவிரமாகக் தேடிவந்தனர். இதற்கிடையே தலைமறைவாக இருந்த அய்யனார் ஒரு விபத்தில் சிக்கி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தபோது, அவரைத் தனிப்படை காவல் துறையினர் கைதுசெய்து விசாரணை நடத்தினர். .
அவரிடம் நடத்திய விசாரணையில் தாமரைக்கண்ணன், கிரிநாத், கார்த்திக், அய்யனார் ஆகிய நான்கு பேரும் கொலைசெய்யப்பட்ட முத்து ராமலிங்கத்தின் நண்பர்கள் எனவும், முத்துராமலிங்கம், தாமரைக்கண்ணனின் சகோதரியிடம் தவறாக நடந்து கொண்டதாலேயே ஆத்திரமடைந்து நண்பர்களோடு சேர்ந்து திட்டமிட்டு படுகொலைசெய்ததாகவும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
முத்துராமலிங்கம் கொலை வழக்கு அய்யனார் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் முத்துராமலிங்கத்தைக் கொலைசெய்த சிலுக்குப்பட்டியைச் சேர்ந்த கிரிநாத் மதுரையைச் சேர்ந்த புல்லட் மணி, நந்தகோபால், கமுதியைச் சேர்ந்த பிரசாத் ஆகிய நான்கு பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
கொலைக்கு உதவியாக இருந்த அய்யனார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் நிலையில் கொலைக்கு உதவியாக இருந்த சங்கர், தாமரைக் கண்ணன் ஆகியோரை தனிப்படை காவல் துறையினர் கைதுசெய்து சிறையிலடைத்தனர்.