விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நெசவாளர் காலனி அருகே அன்பு நகர் பகுதியைச் சேர்ந்த ராஜபாண்டி என்பவர் டீ மாஸ்டர் தொழில் செய்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் மோகன கண்ணன். இருவரும் மது குடிப்பதில் பழக்கமாகிய நண்பர்கள். வழக்கம் போல் ராஜபாண்டியும் அவரது நண்பர் கண்ணனும் மது அருந்தி கொண்டிருக்கும்போது குடும்ப விஷயங்களை பேசியுள்ளனர். இதில் ராஜபாண்டி, மோகன கண்ணனின் மனைவியை தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
அதன்பின் மாலை நேரம் ராஜபாண்டி நெசவாளர் காலனி அருகே உள்ள அரசு நடுநிலைப் பள்ளி வழியே இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது, வழிமறித்த மோகன கண்ணன் ராஜபாண்டியை அரிவாளால் சரமாரி வெட்டிவிட்டு தப்பி ஓடினார்.
தகவலறிந்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, படுகாயமடைந்த ராஜபாண்டியை அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.