விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் கிருஷ்ணாபுரம் பகுதியில் இதுவரை 28 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அந்தப்பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து, தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
அந்தப்பகுதியில் இன்று (மே 27) சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
தடை செய்யப்பட்ட பகுதியிலுள்ள மக்களிடம் உங்களுக்குத் தேவையான உதவிகள் தடையின்றி கிடைக்கின்றதா? என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டறிந்தார்.
அதைத்தொடர்ந்து ராஜபாளையம் பிஏசிஆர் அரசு மருத்துவமனையினை ஆய்வு மேற்கொண்டபோது ஆக்ஸிஜன் தட்டுப்பாடின்றி கிடைக்கிறதா, தேவையான படுக்கை வசதிகள் அனைத்தும் வழங்கப்படுகின்றதா என மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும், எந்த ஒரு தங்குதடையின்றி நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க வேண்டும் எனவும் மருத்துவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.