விருதுநகர்மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள இருக்கன்குடி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலுக்கு கடந்த 10 ஆண்டுகளில் பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட 27 ஆயிரத்து 236.600 கிராம் நகையை மும்பையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான உருக்காலையில் உருக்கி, சுத்த தங்கக் கட்டிகளாக மாற்றி வங்கிகளில் 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்யும் திட்டத்தை இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோயில் வளாகத்தில் நீதிபதி ஆர்.மாலா தலைமையில் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி முன்னிலையில் நேற்று (ஏப்.1) நடைபெற்றது.
இதில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ். எஸ். ஆர் இராமச்சந்திரன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் கலந்து கொண்டு கோயில் 'நிர்வாகத்திடம் பெறப்பட்ட தங்க நகையை சாத்தூர் ஸ்டேட் வங்கி கிளை மேலாளரிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சேகர் பாபு, "முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவுப் படி தமிழ்நாட்டை மூன்று மண்டலங்களாகப் பிரித்து இந்த மண்டலங்களில் உள்ள கோயில்களில் உள்ள சாமிக்கு பயன்படாத நகைகளை மும்பையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான உருக்காலையில் உருக்கி சுத்த தங்கங்கங்களாக மாற்றப்படும்” என்றார்.
இறை சொத்து இறைவனுக்கே:இந்தத் தங்க கட்டிகளை வங்கிகளில் 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்யப்படும் என்றும் அதில் வரும் வட்டியை வைத்து அந்தந்த கோயில்களின் திருப்பணி மேற்கொள்ளப்படும்.
குறிப்பாக இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோயிலில் இருந்து இன்று எடுக்கப்படும் 27 ஆயிரத்து 236.600 கிராம் தங்கத்தை உருக்கி வங்கியில் டெபாசிட் செய்வதன் மூலம் ஆண்டுக்கு 24 லட்சம் வட்டியாக கிடைக்கும்.
இறை சொத்து இறைவனுக்கே என்ற முறையிலும், வெளிப்படைத் தன்மையாக இருப்போம் என்ற தாரக மந்திரத்தைக் கருத்தாகக் கொண்டு தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருவதாக" தெரிவித்தார்.