இந்து சமய அறநிலையத் துறை சார்பில் புதிதாக கட்டப்படவுள்ள உதவி ஆணையர் மற்றும் உதவித் தணிக்கை அலுவலர் அலுவலகக் கட்டடங்களுக்கு, அம்மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். கண்ணான் மற்றும் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் பூமி பூஜை செய்யப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்நிகழ்வைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ’ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை மட்டும் தாக்கும் இயக்கமாக திராவிடர் கழகம் உள்ளது. ரஜினி ரசிகர்கள், இந்த பிரச்னையில் பொறுமை காப்பது தனக்கு சங்கடமாக உள்ளது. பெரியாரை அவமரியாதையாக ரஜினி பேசவில்லை. திராவிடர் கழகத்தினர் ரஜினியை மிரட்டி பார்க்கின்றனரா?
ஆன்மீகவாதிகளை பழிதீர்க்கும் செயலை திகவினர் தொடர்ந்து செய்துகொண்டிருக்கின்றனர். ரஜினிகாந்த் ஒரு நியாயவாதி. நல்ல மனிதர். மனதில் பட்டதை பேசுபவர். அவர் பேசிய நியாயத்தை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். திமுகவின் முகமூடியாகத்தான் திக திகழ்கிறது. ரஜினிகாந்த் என்ற தனிமனிதனை அவமரியாதை செய்வது கண்டிக்கத்தக்கது. அவர் தமிழச்சியை திருமணம் செய்தவர்” என்றும் கூறினார்.
ஆர் எஸ் எஸ் இயக்கத்தினரைப் பற்றி பேசுகையில், "ஆர் எஸ் எஸ் இயக்கத்தினர் என்ன பயங்கரவாதிகளா? அவர்கள் எங்கே குண்டு வைத்தார்கள், மகாத்மா காந்தியை கொலை செய்த கோட்சேவை, கொலையாளியாகத் தான் பார்க்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ்ஸை சார்ந்தவராக பார்க்க முடியாது. கோவிலுக்கு கடவுளை வணங்க செல்பவர்கள் எல்லாம் ஆர்.எஸ்.எஸ்ஸைச்ன் சேர்ந்தவர்கள் இல்லை. ஜே. என். யூ பல்கலைக்கழகத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் பொதுநலவாதிகள், தேசியவாதிகள். அவர்கள் வன்முறையை வெறுக்க கூடியவர்கள்” என்றார்.