நாளை முதல் மே 3ஆம் தேதிவரை 11 நாள்களுக்கு மாவட்டத்தில் உள்ள 8 அம்மா உணவகங்களில் 3 வேளையும் இலவசமாக உணவு வழங்க ரூபாய் 8 லட்சத்து 60 ஆயிரத்தை மாவட்ட ஆட்சியர் கண்ணனிடம் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''சமூக ஆர்வலர்கள், பொதுநல விரும்பிகள், தொழிலதிபர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பணியாற்றி வருகிறோம். அம்மா உணவகம் மூலம் அனைவருக்கும் மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டுவருகிறது.
தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் பாதுகாப்பாக இருப்பதற்கு எடப்பாடி அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் விழிப்புணர்வுதான் முக்கியக் காரணம். மருத்துவர்கள் இறைவனின் தொண்டர்கள் என முதலமைச்சர் கூறியுள்ளார். கரோனா வைரஸால் மருத்துவர்கள் உயிரிழந்தால் அவர்களுக்கான நிவாரண உதவியை 10 லட்சத்திலிருந்து 50 லட்சமாக உயர்த்தியுள்ளார்.