விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மல்லி பகுதியில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா ஆகியோர் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தனர்.
அதன் பிறகு விழாவில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஏழை, எளிய மக்கள் நோய் இல்லாமல் வாழ்வதற்கு முதலமைச்சர் பழனிசாமி எடுத்த அற்புதமான நடவடிக்கை இந்த மினி கிளினிக் திட்டம் என்றும் சுகாதாரத்துறையை ஊக்குவித்து கரோனா வைரஸை விரட்டியடித்த வரலாற்று நாயகன் முதலமைச்சர் பழனிசாமி என்றும் புகழாரம் சூட்டினார்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மிளகு, பூண்டு, சுக்கு போன்ற பொருள்கள் அனைத்தையும் சேர்த்து மிளகு ரசம், பூண்டு ரசம் வைத்து குடித்தால் கரோனா வைரஸ் ஓடிவிடும் என்று கூறிய அமைச்சர், சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை என்ற பழமொழியை மேற்கோள்காட்டினார்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடர்ந்து பேசிய அவர், சுதந்திரம் பெற்ற பிறகு ஒரே வருடத்தில் தமிழ்நாட்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை கொண்டு வந்து வரலாறு படைத்தவர் முதலமைச்சர் பழனிசாமி என்றும், அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு கொடுத்து அவர்களின் மருத்தவ கனவை நிறைவேற்றியதும் முதலமைச்சர் என பெருமிதம் தெரிவித்தார்.