விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கலில் மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கோவிட்-19 சிறப்பு கடன் உதவித்திட்டத்தின் கீழ் கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, 3 ஆயிரத்து 419 உறுப்பினர்களை கொண்ட 255 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ஒரு கோடியே 71 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கடனுதவியை வழங்கினார். இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு கட்டுமான வாரியம் மூலம் 2 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பாதுகாப்பு உபகரணங்கள் 432 தொழிலாளர்களுக்கு 8 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது, "கரோனா பரவலில் இருந்து தப்பிக்க உலகில் உள்ள அனைத்து தலைவர்களும் விலகி இரு, வீட்டில் இரு, தனித்திரு எனக் கூறி வருகின்றனர். ஆனால், திமுக தலைவர் ஸ்டாலின், "ஒன்றிணைவோம் வா" எனக்கூறி நாட்டு மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார். திமுக என்றாலே சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் கட்சி என நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும். தந்தை பெரியாரும், அண்ணாவும் சுயமரியாதை இயக்கமாக திமுகவை வழி நடத்தினார்கள்.