விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் அதிமுக சார்பில் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமை தாங்கிய இந்தக் கூட்டத்தில், அதிமுக, அதன் கூட்டணிக் கட்சிகளை சார்ந்த நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் என சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியின் அதிமுக வேட்பாளர் ஆர்.கே.ரவிச்சந்திரனை அறிமுகப்படுத்தி பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, "அனைத்து சமுதாயத்தினருக்கும் பிரதிநித்துவம் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே நான் சிவகாசி தொகுதியிலிருந்து ராஜபாளையம் தொகுதிக்கு மாறினேன். எங்கு நின்றாலும் மக்கள் என்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பார்கள்.
வெற்றி பெற்றவுடன் அதிமுக அறிவித்த திட்டங்களை நிறைவேற்றும். ஆனால் திமுக, அறிவித்த திட்டங்களை நிறைவேற்றாமல் அவர்களுடைய குடும்பத்தைக் காப்பாற்ற பணியாற்றும். அதிமுக-பாஜக கூட்டணி என்பது ஆன்மீகக் கூட்டணி. இந்தத் தேர்தலில் அதிமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற பிரதமர் மோடி என்றும் துணை நிற்பார். அதிமுகவுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் பிரதமர் மோடி நிதி கொடுத்து வருகிறார். அந்த காரணத்தினாலே முதலமைச்சர் வாக்குறுதிகளை அறிவிக்கிறார். திமுக சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற எப்படி பணம் கிடைக்கும்?
நாங்கள் கேட்டதும் மோடி பணம் ஸ்டாலினுக்கு நேரமே சரி இல்லை. அவர் ஜோசியம் பார்க்க வேண்டும். தென் மாவட்டங்களில் திமுக வாங்கிய மனுக்கள் எல்லாம் ஒரு தென்னந்தோப்பில், காட்டில் தான் உள்ளது. இந்த மனுக்கள் எங்கு இருக்கிறது என்பது ஸ்டாலினுக்கே தெரியாது. அதிமுகவும் பிஜேபியும் கூட்டணி வைத்தால் ஆகாத கூட்டணி எனக் கூறும் திமுகவினரும், பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளனர். தற்போது பாஜக வளர்ந்த கட்சியாக மாறியதால் அவர்கள் இதுபோன்று பேசுகின்றனர். பிரதமர் வல்லரசு நாடுகளே அச்சப்படும் வண்ணம் பலம் வாய்ந்தவராக இருக்கிறார். இலையும் தாமரையும் சேர்ந்துள்ளது. இது மிக அற்புதமான கூட்டணி. நமக்கெல்லாம் எதிரி திமுக மற்றவையெல்லாம் உதிரிகள்" என்றார்.