விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பாக மான்ராஜ் போட்டியிடுகிறார். இதை முன்னிட்டு நடைபெற்ற அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமை வகித்தார்.
பின்னர் பேசிய அவர், "நடைபெறவுள்ள தேர்தல் மகாபாரதம் யுத்தம் போன்றது. பாண்டவர் பக்கம் நியாயம் இருந்ததுபோல, இபிஎஸ் பக்கமும், ஓபிஸ் பக்கமும், பிரதமர் மோடி பக்கமும் நியாயம் இருக்கிறது. ஆனால் திமுக, காங்கிரஸ் பக்கம் அநியாயமும் அக்கிரமும் இருக்கிறது. 3 லட்சம் பேரை இனப்படுகொலை செய்த கட்சி காங்கிரஸ், திமுக கட்சி. இலங்கையில் தமிழர்களைக் கொன்று குவித்தது அவர்கள்தான்" என்று தெரிவித்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு தொடர்ந்து பேசிய அவர், "திமுக கூட்டணியினர் இருப்பதைச் சுருட்டலாம் என்ற எண்ணத்தோடு உள்ளனர். பசி தீர்த்த புலிக்கு கிடைத்ததெல்லாம் பலியாகிவிடும் என்பதைப்போல பத்து ஆண்டுகள் வெறிப்பிடித்து காத்திருக்கும் அவர்கள் தமிழ்நாட்டை அடித்து நொறுக்கி கூறுபோட காத்திருக்கிறார்கள்.
ஆன்மிகத்தில் ஈடுபடக்கூடிய அத்தனை பேரும் ஒன்றாகவும் ஒற்றுமையாகவும் இணைந்து இருக்கிறோம். அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் ஒற்றுமை என்றால் இருவருமே ஆன்மிகவாதி. சொல்லுகின்ற திட்டங்களை நிறைவேற்றும் ஆட்சி எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி" என்றார்.
மேலும் பேசிய அவர், "திமுக ஒரு பரம்பரைக் கட்சி. கனிமொழி என் மகன் அரசியலுக்கு வர மாட்டார் எனத் தெரிவித்தது அரசியலுக்கு வருவார் என்னும் அர்த்தத்தில்தான். இதுபோல், ஸ்டாலின் தனது மகன் அரசியலுக்கு வர மாட்டார் எனக் கூறினார். பின்னர் அவர் அரசியலுக்கு வந்தார். இவர்கள் தலைமுறை அரசியல்வாதிகள்" எனக் கடுமையாக விமர்சித்தார்.