விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில், சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள 517 அர்ச்சகர்களுக்கு நிவாரண உதவியை பால் வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழங்கினார். இதில் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கூறியதாவது, 'விருதுநகர் மாவட்டத்தில் 16 பேர் மட்டுமே கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சைப் பெற்று வந்த மற்றவர்கள் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர்.
அனைத்து அர்ச்சகர்களும் வசதியாக இருப்பவர்கள் கிடையாது. ஏழை, எளிய அர்ச்சகர்களும் இருப்பார்கள். அவர்களுக்கு உதவி செய்யப்பட்டு வருகிறது. கரோனா வைரஸ் காரணமாக பிரதமர் மோடி உள்பட அனைத்து வல்லரசு நாடுகளின் தலைவர்களும் 'விலகி இருப்போம்' எனக் கூறி வரும் நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் மட்டும் 'ஒன்றிணைவோம் வா' என அனைவரையும் அழைத்து அரசியல் செய்து வருகிறார்.
ஸ்டாலின் உண்மையான குறைகளை சுட்டிக்காட்டலாம். ஆனால், அவர்கள் நிறையை ஏதும் கூறாமல் குறைகளை மட்டுமே தேடித் தேடிக் கூறி வருகிறார். ஸ்டாலின் பேச்சை பொருட்படுத்தவேண்டிய அவசியமில்லை. கோயில் குறித்த ஜோதிகாவின் கருத்திற்கு இறைவனை நினைப்பவர்களுக்கு மட்டும் தான் ஏழைகளுக்கு உதவவேண்டுமென்ற எண்ணம் வரும். இறைவன் இல்லை என்று சொல்லும் நாத்திகர்களுக்கு பிறருக்கு உதவும் எண்ணம் வராது. இதுபோன்ற கருத்துகள் தற்போது தேவையில்லை.
செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவின் பாலை பொறுத்தமட்டில், எல்லா இடங்களுக்கும் சென்று கொண்டிருக்கிறது. தனி ஒருவர் வீட்டில் வரும் பாலில் பிரச்னை என்று சொன்னால், அதற்கு சாட்சிகள் கிடையாது. அதையே முதலமைச்சர் சரி செய்துவிட்டார். ஆவின் பால் தமிழ்நாடு முழுவதும் எந்த பிரச்னையும் இல்லாமல், சென்றடைய ஆவின் ஊழியர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆவின் பணியாளர்களை மக்கள் பாராட்டி வருகின்றனர்' எனத் தெரிவித்தார். இதையும் படிங்க: அமைச்சர் தர்ணா போராட்டம்