விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, பாஜக கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, "என்னை இந்துக்களின் காவலன் என்று நான்காண்டு காலமாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் பாஜகவின் கையால் என குற்றஞ்சாட்டினார்.
நான் போட்டியிடும் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி என 3 பேர் வந்து பரப்புரை செய்துள்ளனர். மற்ற இடங்களில் யாரேனும் ஒருவர் சென்று பரப்புரை செய்கின்றனர். திமுகவினர் என்னை மட்டும்தான் பதம் பார்க்கணும் என பரப்புரை செய்து வருகின்றனர்.
ஸ்டாலின் மகள் வீடு ரூ.1,100 கோடி மதிப்பு என கூறப்படுகிறது. நம்ம தொகுதியில் திமுகவை சேர்ந்த தொண்டர்கள் வீடு இல்லாமல் உள்ளனர்.
மோடியை டாடி என்று சொல்வதில் என்ன தவறு அதிமுக ஆட்சி, மோடி ஆட்சியை குறை சொல்லும் நோக்கில் ஸ்டாலின் திரிகிறார்.
பிரதமர் மோடி எதையும் எதிர்பார்க்காமல் தன்னை நாட்டிற்காக அர்ப்பணித்தவர். பல நாடுகளும் இவரை பார்த்து அஞ்சும் வகையில் இருக்கிறது. இது இந்தியாவில் பிறந்த 100 கோடி மக்களுக்கு பெருமை.
இதனால் மோடியை இந்தியாவின் டாடி என கூறினேன். இதில் என்ன தவறு இருக்கிறது. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் போல் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய தேசியமும் தெய்வீகமும் நிறைந்த தலைவர் நரேந்திர மோடி.
அனைத்து தொலைக்காட்சியிலும், சமூக வலைதளங்களிலும் திமுகவினர் கருத்துக்களை திணிக்கின்றனர். அதிமுக ஆட்சியில் சாதி கலவரம், இன கலவரம் இல்லை. தேச விரோதிகளை ஊக்குவிப்பதும், தூண்டுவதும் திமுக கட்சியின் செயல்.
10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் வரலாறு காணாத தொழில் வளர்ச்சியடைந்துள்ளது. திமுக கூட்டணி தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே ஆபத்து" என்றார்.
இதையும் படிங்க: புதுமணத் தம்பதியை வாழ்த்திய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி