"உயிர்களிடத்தில் அன்பு செலுத்துதல் வேண்டும்" என்ற பாரதியாரின் கூற்றை தனது வாழ்க்கையில் செயல்படுத்தியுள்ளார், சுனிதா கிறிஸ்டி. விருதுநகர் மாவட்டம், குமாரபுரத்தில் அமைந்திருக்கும் சுனிதாவின் வீட்டுத் தொழுவம்தான், பல ஐந்தறிவு ஜீவன்களுக்கு அடைக்கலம் அளித்துள்ளது. கரோனா நெருக்கடிக்கு மத்தியில் சக மனிதனுக்கு உதவும் மனிதநேயமே நீர்த்துப் போன நிலையில், நிராதரவாக நிற்கும் விலங்குகளைத் தன்னுடைய பிள்ளைகள் போல பாகுபாடில்லாமல் அரவணைத்துப் பாதுகாத்துவருகிறார்.
விலங்குகளையும் பறவைகளையும் தன்னுடைய குடும்பமாகப் பாவிக்கும் மனிதி என்றே சுனிதாவைச் சொல்லலாம். இறைச்சியாகவிருந்த உயிரினங்கள் தொடங்கி விபத்தில் சிக்கித்தவித்த உயிரினங்கள்வரை அனைத்தும், தற்போது இவருடைய தொழுவத்தில் நிம்மதியாக நடமாடுகின்றன. இந்தக் கரோனா காலத்தில் அல்ல, கடந்த 15 ஆண்டுகளாக நிராதரவான விலங்குகளைப் பராமரிக்கும் பொறுப்பில் தன்னை அர்ப்பணித்துள்ளார், சுனிதா.
தற்போது இவருடைய தொழுவத்தில் மாடு, ஆடு, குதிரை, எருமை, கழுதை, நாய், பன்றி, கோழி, வான்கோழி உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட விலங்கினங்களையும், பறவையினங்களையும் உணவு வழங்கி பாதுகாத்துவருகிறார். இத்தனை உயிரினங்களுக்கும் உணவு வழங்குவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல எப்படிச் சமாளிக்கிறீர்கள் எனக் கேட்டோம். அவர் கூறுகையில், “பொருளாதார உதவிகளைச் சமூக வலைதளங்கள் மூலம் பெற்றுக்கொள்கிறேன். பொதுமக்கள் தங்களால் பராமரிக்க முடியாவிட்டாலும், பராமரிக்க முடிகிறவர்களுக்கு உதவுகின்றனர். அவர்களுக்கு நன்றி.